சென்னை: பூவுலகின் நண்பர்கள் குழு நேற்று முன்தினம், (ஆகஸ்ட் 08), நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தொடர்பான "மின்சாரத்தின் இருண்ட முகம்" என்கிற ஆய்வறிக்கை வெளியிட்டது. அந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் குழு அமைப்பின் சுந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய தமிழக மக்கள் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், என்.எல்.சி நிறுவனம் இயற்கைக்கு முராணான செயல்களை செய்து வருதாகவும், விவசாயப் பகுதிகள் மற்றும் குடிநீரின் ஆதாரம் இருக்கும் இடங்களில் அனல்மின் நிலையத்தின் கழிவுகள் சேருவது அதிர்ச்சி அளிப்பதாகவும், நீதிமன்றம் வரை சென்றபிறகும் நிலத்தை வழங்கியவர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: முன் அறிவிப்பின்றி விவசாய நிலங்களை அகற்றும் அரசு அதிகாரிகள்.....விவசாயி வேதனை
மேலும், சுற்றுச்சூழல் குறித்த பரிந்துரைகளை என்.எல்.சி நிறுவனம் செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், ஐஏஎஸ் அதிகாரி தலைமயிலான குழுவை அமைத்து மாசடையும் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை மாதம்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (National Green Tribunal) நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் சாய் அமர்வு தாமாக முன்வந்து (suo moto) இன்று வழக்காக விசாரித்துள்ளது.
விசாரணையில், NLC நிர்வாகம், மத்திய, மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட தொடர்புடைய அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இதையும் படிங்க: யூடியூப் சேனல் நடத்துவதில் போட்டி: வாலிபரை கத்தி முனையில் கடத்திய கும்பல் - தருமபுரியில் நடந்தது என்ன?