சென்னை: கடலூரைச் சேர்ந்த விவசாயி முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மேல்பாதி கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக சிறப்பு தாசில்தார் நிலம் கையப்படுத்தும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு போடப்பட்ட நிலம் கையகப்படுத்தும் ஒப்பந்தம் கடந்த 16 ஆண்டுகளால் கிடப்பில் இருந்ததால், இழப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ன் படி ஒப்பந்தம் தானாகவே காலாவதியாகி விட்டது. இந்நிலையில், எந்த அறிவிப்பும் இல்லாமல் ஜூலை 26ஆம் தேதி சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாய பயிர்கள் காட்டுமிராண்டித்தனமாக அழிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் படி 5 ஆண்டுகளுக்குள் நிலத்தை கையப்படுத்தவில்லை என்றால், நிலம் அதன் உரிமையாளருக்கோ? அல்லது வாரிசுதாரர்களுக்கோ? நிலத்தின் உரிமை சென்று விடும் என கூறப்பட்டுள்ளது. அதனால், நிலத்தை கையப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். நிலத்தை மீட்டு விவசாயிகளுக்கே ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டின் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் நெய்வேலி சுரங்கத்தில் 1735 மெகா வாட் மின்சாரம் தினமும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 320 கோடி மாதம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்ய அரசுக்கு இடம் தேவைப்படுகிறது. 99 சதவிகித நில உரிமையாளர்கள் அரசின் நில கையகப்படுத்துதலை ஏற்று, நிலத்தை காலி செய்து விட்டனர். மீதமுள்ள 1 சதவிகித மக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இத்திட்டம் தாமதமாவதால், இதுவரை 2000 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 1.5 கிலோ மீட்டர் கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே அரசின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. 1 ஏக்கர் நிலத்துக்கு இழப்பீடாக 15 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 30,000 ரூபாய் இழப்பீடாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மீதான கருணை காரணமாக தற்போது மின்சார உற்பத்தியை அதிகப்படுத்தாமல் இருந்தால், அடுத்த 2 மாதத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்படும். இழப்பீடு சட்டம் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும், என்.எல்.சி விவகாரத்திற்கு பொருந்தாது. நிலத்தை கையகப்படுத்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், அதை ஏற்றவர்கள் நிலத்தை உபயோகப்படுத்தினால் அத்துமீறி ஆக்கிரமித்திருப்பதாகவே கருத முடியும்.
இதையடுத்து என்.எல்.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விவசாயம் நடக்காத நிலையில், பொய்யான காரணங்களை கூறி போராட்டங்கள் நடத்தப்படுகிறது. கடந்த 2022 டிசம்பரில் தலைமை செயலாளர் முன்னிலையில் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் நில உரிமையாளர்களிடம் அனுமதி வாங்கப்பட்டது. அவசர தேவைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என என்.எல்.சி அறிவித்தது. அதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மேலும், 2023 பொங்கல் பண்டிகைக்கான நெல் அறுவடையை முடிக்கும் வரை நிலம் கையகப்படுத்தப்படாது எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. நில உரிமையாளர்கள் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் செயல்படாமல், தற்போது இழப்பீடு கேட்பதை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் நெற்பயிர்கள் அழிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. ஆனால், என்.எல்.சி தரப்பில் விவசாயம் செய்யவில்லை என கூறுவதை எப்படி ஏற்க முடியும். நிலம் என்.எல்.சிக்கு உரிமையானதாக இருந்தால், ஏன் அங்கே விவசாயம் செய்ய அனுமதித்தீர்கள்? இப்போது ஏன் அத்துமீறல் என காவல்துறையை வைத்து அப்புறப்படுத்துகிறீர்கள்? தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருந்தால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.
மேலும், 80 மீட்டர் அகலமுடைய கால்வாய் அமைப்பதற்காக ஏற்கனவே பயிர்கள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், தடை விதித்தும் எந்த பயனும் விவசாயிகளுக்கு ஏற்படாது. மக்களுக்கு மின்சாரம் அத்தியாவசியம், அதை உற்பத்தி செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைக்கு தடை விதித்தால் மின்சார பற்றாக்குறை ஏற்படும்.
விவசாயத்தை பாதுகாப்பதில் நீதிமன்றத்திற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கால்வாய் அமைக்கப்பட்ட இடத்தை தவிர, மற்ற இடங்களில் உள்ள ஒரு பயிர்கள் கூட பாதிக்கப்படாது என நீதிமன்றம் உறுதி அளிக்கிறது. மழை காலங்கள் தொடங்கி விட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலம் கையகப்படுத்தியிருப்பதை சட்டவிரோதமாக கருத முடியாது.
இதனால் கால்வாய் அமைக்கும் பகுதியை தவிர, மற்ற இடங்களில் உள்ள பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என நீதிமன்றம் உறுதி அளிக்கிறது. விவசாயம் செய்யப்பட்ட இடங்களில் உள்ள பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட பின்னரே என்.எல்.சி நிலத்தை கையகப்படுத்த வேண்டும்.
இதுவரை எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு பணிகள் முடிந்துள்ளது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விவசாயிகள் தரப்பில் அறுவடை முடிந்ததும், நிலத்தை என்.எல்.சி-யிடம் ஒப்படைக்க வேண்டும் என உறுதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதி நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க:‘இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா’ - இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்