சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் கால்நடை மருத்துவப்படிப்பிற்கு 7,825 மாணவர்களும், பி.டெக் படிப்பிற்கு 1,510 மாணவர்களும் என மொத்தம் 9,335 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் 26ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்புகள் 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
கடந்தாண்டைப் போலவே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு 2022-23ஆம் கல்வியாண்டிலும் வழங்கப்படும். கால்நடை மருத்துவப் படிப்பிற்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும். தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்பு (பிவிஎஸ்ஸி ஏஎச்) 4 ஆண்டு 6 மாதம் படிப்பும், 1 ஆண்டு உள்ளிருப்புப் பயிற்சியும் வழங்கப்படும். இதில் 580 இடங்கள் உள்ளன.
சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் 120 இடங்கள், நாமக்கல், திருநெல்வேலி, தஞ்சாவூர் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தலா 100 இடங்கள், சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுரோடு ஆகியவற்றில் 80 இடங்கள், தேனி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தலா 40 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
பி.டெக் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் கொடுவளியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்கள், கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு ஓசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் கொடுவளியில் 20 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பிற்கு 7,825 மாணவர்களும், பி.டெக் படிப்பிற்கு 1,510 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். 26ஆம் தேதி மாலை 5 மணி வரையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்ஃப்ளுயன்ஸா பதற்றம் வேண்டாம்..வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்