சென்னை: கும்பகோணம் அடுத்த திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகரும், பாத்திரக்கடை நடத்தி வந்த ராமலிங்கத்தை, கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கும்பல் படுகொலை செய்தது.
மதமாற்றத்தை தட்டிக்கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.
மதமாற்றம் தொடர்பான விவகாரம் என்பதால் இந்த வழக்கானது தேசிய குற்றப்புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள ரஹ்மான் சாதிக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், சாகுல் ஹமீது, நஃபீல் ஹாசன் ஆகிய 6 பேரை என்ஐஏவினர் தேடி வந்தனர்.
திருபுவனம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், மேலக்காவேரி, திருபுவனம் மற்றும் திருமங்கலக்குடி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தலைமையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காமராஜர் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல், மதுரை மாவட்டம் பேரையூர் அருகே எஸ்.கீழப்பட்டியைச் சேர்ந்த ராமன் என்ற அப்துல் ரசாக் என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். இவ்வாறு தமிழ்நாட்டின் தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் இன்று (ஜூலை 23) தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஜூலை 18 அன்று ஈரோடு மாவட்டம் தொட்டம்பாளையம் அருகே தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆசிப் (36) மற்றும் அவருடன் அறையில் தங்கி இருந்த மற்றொருவர் என இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து கேரளாவிற்கு அழைத்துச் சென்றனர். மேலும், கேரளாவில் உள்ள ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்த பணத்தை சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: Erode NIA Raid: ஈரோட்டில் என்ஐஏ சோதனை - இருவரை அழைத்துச் சென்று விசாரணை