சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் நாராயணசாமியை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் 10-வது துணைவேந்தராக மருத்துவர் சுதா சேஷய்யன் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்தது.
ஓய்வு: இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வற்கான குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே சுதா சேஷய்யனுக்கு, 2022 டிசம்பர் 30ஆம் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். தொடர்ந்து 4 ஆண்டுகள் துணைவேந்தராக இருந்த சுதா சேஷய்யன், அப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.
துணைவேந்தரை தேர்வு செய்ய குழு: இந்நிலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய ஓய்வு்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்புராஜ் தலைமையில் தேடல் குழு, ஜனவரி முதல் வாரத்தில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில், மூத்த மருத்துவர்கள் வசந்தி வித்யா சாகரன் , ராமச்சந்திரா மருத்துவமனையின் டெலி மெடிசன் துறை தலைவர் K.செல்வகுமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
அந்த குழு அமைக்கப்பட்டு, இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, துணைவேந்தர் பதவிக்கு தகுதியுள்ள கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து உள்ளது. ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஒரு மாத கால அவகாசம், இந்த குழுவால் வழங்கப்பட்டு இருந்தது.
துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளவர்களில் இருந்து, தகுதியான 3 பேரை தேர்வு செய்து இக்குழு ஆளுநரிடம் வழங்கும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் தேர்வு செய்து துணை வேந்தராக நியமிப்பார்.
துணைவேந்தர் நியமனம்: அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர்.நாராயணசாமி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பிறப்பித்து உள்ளார். மருத்துவத் துறையில் 33 ஆண்டு காலம் அனுபவம் கொண்ட நாராயணசாமி 13 ஆண்டுகள், பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் துறைத் தலைவராக பணியாற்றி உள்ளார். மேலும், பல்வேறு அரசு திட்டங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
தற்போது அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். முன்னதாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக பணியாற்றி உள்ளார். கரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது, கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த அரசு கரோனா மருத்துவமனையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேனி சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை!