சென்னை: சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு விமான முனையம் டெர்மினல் 1, டெர்மினல் 4 என்று இரு பிரிவுகளாக நாளை (நவ.15) முதல் பிரிக்கப்படுகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் 2 உள்நாட்டு முனையங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.
சென்னை விமான நிலைய டெர்மினல் 1, பழைய உள்நாட்டு முனையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஸ்பை ஜெட், விஸ்தாரா, ஏர் ஏசியா, ஆகாஷா பயணிகள் விமானங்கள் இயக்கப்படும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டெர்மினல் 4 உள்நாட்டு முனையத்தில், ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்களின் உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் இன்று 14 ஆம் தேதி புதிய உள்நாட்டு முனையம், டெர்மினல் 4-ல் நடந்தது.
சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.2,467 கோடி திட்டத்தில், இரண்டு கட்டங்களாக கட்டுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018ஆம் ஆண்டில் முடிவு செய்து பணிகளை தொடங்கியது. அதில் முதல் கட்ட பணி, 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு, இந்த ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், டெர்மினல் 2 (டி 2) இந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதில் விமான சேவைகள், இந்த ஆண்டு ஜூலை ஏழாம் தேதியிலிருந்து முழு அளவில் நடந்து கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்டு கொண்டிருந்த டெர்மினல் 3 மற்றும் டெர்மினல் 4 ஆகியவை முழுவதுமாக மூடப்பட்டது. அதன் பின்பு, டெர்மினல் மூன்றை இடிக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. அந்தப் பணி முடிவடைந்ததும், விமான நிலைய இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.
இதற்கிடையே பழைய சர்வதேச முன்னையம் டெர்மினல் 4, நல்ல நிலையில் இருந்ததால் அதை இடிக்காமல், கூடுதல் உள்நாட்டு விமான முனையமாக பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து சர்வதேச முனையமாக இருந்த அந்த டெர்மினல் 4, உள்நாட்டு முனையமாக மாற்றி அமைக்கும் பணி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கியது. இப்பணிகள் முடிவடைந்ததும், டெர்மினல் நான்கை புதிய உள்நாட்டு முனையமாக செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்தன.
இந்த புதிய உள்நாட்டு முனையம் கடந்த செப்டம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிவடையாததால், கடந்த அக்டோபர் 29ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதும் பணிகள் முடிவடையாததால், புதிய உள்நாட்டு முனையம் திறப்பு, நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில் இப்போது டெர்மினல் நான்கில், உள்நாட்டு முனையமாக மாற்றும் பணிகள் நிறைவடைந்து விட்டதால், நவம்பர் 15 ஆம் தேதி (நாளை) இந்த புதிய உள்நாட்டு முனையம் செயல்பாட்டிற்கு வர இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் அறிவித்துள்ளனர்.
புதிய உள்நாட்டு முனையத்தில் சோதனை ஓட்டம்: இதையொட்டி, இன்று 14 ஆம் தேதி புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் நான்கில் சோதனை அடிப்படையில், விமானங்கள் தரையிறங்குவது புறப்படுவது போன்றவைகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி, ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஏஐ 550, அந்தமானில் இருந்து சென்னை வரும் உள்நாட்டு விமானம், காலை 10:20 மணிக்கு, சென்னை புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் நான்கில் வந்து தரை இறங்கியது. அதைபோல், அதே ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஏஐ 563, சென்னை புதிய உள்நாட்டு முனையத்தில் இருந்து, காலை 11:10 மணிக்கு பெங்களூருக்கு, புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் புதன்கிழமை, அதிகாலையில் இருந்து புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4, முழு அளவில் செயல்பாட்டிற்கு வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே பயன் பாட்டில் உள்ள உள்நாட்டு முனையம் டெர்மினல் 1-ல், இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு பயணிகள் விமானங்கள் முழுமையாக இயக்கப்படும். அதோடு ஸ்பை ஜெட், விஸ்தாரா, ஏர் ஏசியா, ஆகாஷா விமானங்கள் அனைத்தும், ஏற்கனவே உள்ள டெர்மினல் ஒன்றில் இருந்து புறப்படும், புதிதாகத் தொடங்கப்படும் புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் நான்கில் இருந்து, ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களின் உள்நாட்டு விமான சேவைகள், வருகை புறப்பாடு அனைத்தும் இயக்கப்படும்.
இதைத்தொடர்ந்து வரும் காலங்களில் படிப்படியாக, ஸ்பை ஜெட், விஸ்தாரா, ஏர் ஏசியா, ஆகாஷா விமான நிறுவனங்களின் உள்நாட்டு விமான சேவைகளும், டெர்மினல் நான்கிற்கு மாற்றப்பட இருக்கிறது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
எந்த விமானங்கள் எந்த டெர்மினலில் இருந்து புறப்படும் என்பது பற்றிய அறிவிப்பு பலகைகள், பயணிகள் வசதிக்காக அடுத்த ஓரிரு தினங்களில் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் ஒன்று, டெர்மினல் 4 என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு இட நெருக்கடி இல்லாமல், கூடுதல் இடவசதி கிடைக்கும். அதோடு சென்னை உள்நாட்டு விமான பயணிகளின் வசதிக்காக, மேலும் கூடுதல் விமான சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளன என்றும், விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: விடுதலை போராட்ட வீரர் தகைசால் தமிழர் என்.சங்கரய்யா நலமுடன் உள்ளார்: மருத்துவமனை விளக்கம்