மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க கூறியதால் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக கூறி முஸ்லிக் லீக் தலைவர் முஸ்தபா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக செப்டம்பர் 21ஆம் தேதி பன்னாட்டு மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 30க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் தன்னை பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்போவதாக கொலை மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இதனையடுத்து எனக்கும் எனது வீட்டிற்கும் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர். எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யவேண்டும் என காவல் துறை கூடுதல் ஆணையர் தினகரனை சந்தித்து மனு அளிக்க வந்தேன்” என்றார்.