சென்னை வில்லிவாக்கம் அம்பேத்கர் நகரில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.40 ஆண்டுகளாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று அயனாவரம் பால்பண்ணை அருகே உள்ள நியாய விலை கடையில் ரேசன் பொருட்களை வாங்கி வந்தனர். இந்த சூழலில் வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கநாதனிடம் அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையின்படி சென்னை மாநகராட்சி உதவியுடன் புதிய நியாய விலை கடை கட்டப்பட்டது.
இந்தக் கடையின் திறப்பு விழா நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதனை வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கநாதன் ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.விழாவில் திமுக வட்ட செயலாளர்கள் பாஸ்கர், வாசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பொருட்களை வாங்கி சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கநாதன், வில்லிவாக்கத்தில் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்பகுதி மக்களின் 40 ஆண்டுக் கால கோரிக்கையை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.