சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும், தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 23ம் தேதி வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட அவர், நேற்று (மே 31) தமிழ்நாடு திரும்பினார்.
ஏற்கனவே, ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம் சார்பில் ரூ.1891 கோடி மதிப்பில் குளிர்சாதன கருவிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய தொழிற்சாலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தானது. இந்நிலையில், முதலமைச்சரின் தற்போதைய பயணத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.3,233 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதுகுறித்து தொழில்துறை அதிகாரிகள் தரப்பில், "தமிழ்நாட்டில் மீன்பிடி தொழில் வளர்ச்சிக்காக கடலில் மீன்களை பிடிப்பது முதல் ஏற்றுமதி வரையிலான, தர பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் வரவுள்ளது. தொழிற்துறை சார்ந்து 'School of Excellence' அமைப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தபட்டுள்ளது. ஜப்பானில் பணியாற்றும் வகையில், தமிழ்நாட்டில் இருந்து தொழிலாளர்களை தகுதிப்படுத்தி அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக, ஜப்பான் அரசிடம் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வாகனங்கள் உற்பத்திக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராகவுள்ளதாக ஜப்பான் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஐ-போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள், டெல்டா மாவட்டங்களில் உணவுத்துறை சார்ந்த தரம் உயர்த்தப்பட்ட பொருட்களுக்கான ஆலைகள் கொண்டு வரவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிச்சயம் செயல்பாட்டிற்கு வரும் வகையில் செயல்பட அதிகாரிகளை முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஹை-பி நிறுவனம் - ரூ.312 கோடி, டைசெல் நிறுவனம் - ரூ.83 கோடி, கியோகுட்டோ நிறுவனம் - ரூ.113.9 கோடி, மிட்சுபா இந்தியா - ரூ.155 கோடி, பாலிஹோஸ் டோஃபில் - ரூ.150 கோடி, பாலிஹோஸ் கோஹ்யேய் - ரூ.200 கோடி, பாலிஹோஸ் சட்டோ-ஷோஜி - ரூ.200 கோடி, ஓம்ரான் ஹெல்த்கேர் - ரூ.128 கோடி என மொத்தம் ரூ.3,233 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், வெளிநாட்டு சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.