சென்னை: நடிகைகள் ஒரு விழாவில் கலந்துகொண்டு உரையாடினால், அவர்களின் பேச்சுத் திறமை வெளிப்படும், எளிதாக விளம்பரம் கிடைக்கும். இதன் காரணமாக வணிக நோக்கம் சார்ந்த விழாக்களில் கலந்துகொள்வதில் நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அவர்களின் பேச்சில் வெளிப்படும் சுவாரஸ்யமான தகவல்கள் வருகை தந்திருக்கும் விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் உற்சாகத்தை உண்டாக்கும். அந்த வகையில் சிறப்பாக பேசி, சிறந்த பேச்சாளருக்கான சர்வதேச விருதை நடிகை பார்வதி நாயர் வென்றுள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனமான 'டோஸ்ட்மாஸ்டர்' ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பல சுயமுன்னேற்ற பேச்சாளர்களை உருவாக்கிய நிறுவனம் 'டோஸ்ட்மாஸ்டர்'.
இந்நிறுவனத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள கௌரவ விருந்தினராக அழைக்கப்படுவதற்கே ஏராளமான தகுதிகள் வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் அனுபவ ஆளுமையுடன் சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கும் திறமையாளர்களையும், சாதனையாளர்களும் மட்டும்தான் இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு கௌரவ விருந்தினர்களாக அழைப்பார்கள். இதுபோன்றதொரு கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது அங்கு இளைய தலைமுறை மற்றும் இணைய தலைமுறையின் விருப்பத்திற்குரிய நடிகையான பார்வதி நாயரை பேச்சாளராக அழைத்திருந்தார்கள்.
டோஸ்ட்மாஸ்டரின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட அந்த விழாவில் நடிகை பார்வதி நாயரின் அற்புதமான பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பார்வதி நாயர் பள்ளியில் படிக்கும்போதே மேடைப் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். சுயமுன்னேற்ற பேச்சுக்களை பேசி பார்வையாளர்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கக் கூடியவர். இந்த விழாவின் இறுதியில் அவருக்கு 'டோஸ்ட்மாஸ்டர்' விருது கொடுக்கப்பட்டது. சர்வதேச அளவிலான 'டோஸ்ட்மாஸ்டர்' விருதை வென்ற நடிகை பார்வதி நாயருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நடிகை பார்வதி நாயர், சர்வதேச அளவில் பிரமிக்கத்தக்க அளவிலான பேச்சாளர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கும் டெட்எக்ஸ் (TEDx) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் பேச்சரங்கங்களில் பலமுறை கௌரவ பேச்சாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கேரளா நடிகை திடீர் கைது- பின்னணி என்ன?