சென்னை: சமூகத்தில் தரமற்ற பொறியியல் கல்லூரிகள் இருக்கக்கூடாது என்பதற்காக அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழகம் 2024 முதல் 2027 ஆண்டு வரையில் தொழில்நுட்ப படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், "அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழகம் தொழில்நுட்ப படிப்புகளைக் கற்பிப்பதற்கு அனுமதி வழங்கி வருகிறது.
அதன் அனுமதி பெறாமல் தொழில்நுட்ப படிப்புகளை நடத்தினால் அந்த கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ்கள் செல்லாது. தமிழ்நாட்டில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், திறமையான ஆசிரியர்கள் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் 550 பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், நூறு கல்லூரிகளில் மட்டுமே மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர்.
கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் மாணவர் சேர்க்கையில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தினால் வரையறை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு பாடப்பிரிவில் 120 மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும். இதனால் மாணவர்கள், தரமான கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டினாலும் அவர்களைச் சேர்க்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழகம் 2024 முதல் 2027 ஆண்டு வரையில் தொழில்நுட்ப படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் இந்த வரம்பை மாற்றி அதிகபட்சமாக ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 240 மாணவர்கள் வரை சேர்க்கலாம் என அறிவித்துள்ளது. அதன்படி உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வரும்" எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் ஈடிவி பாரத் தமிழ்நாட்டுச் செய்திகளுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழகம் தான் தொழில் நுட்ப படிப்புகளான பி.இ, பாலிடெக்னிக் போன்ற படிப்புகளுக்கும் அங்கீகாரம் கொடுக்கும். அதன் பின்னர் தான் பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதி வழங்கும். பொறியியல் படிப்பில் கடந்தாண்டு வரையில் ஒரு பிரிவில் 180 மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி இருந்ததை வரும் ஆண்டில் ஒரு பிரிவில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி வரைவு வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் ஒரு கல்லூரியின் பெயருடன் அந்த ஊர்ப் பெயரையும் போட வேண்டும். நல்லக் கல்லூரியின் பெயரில் உள்ள வேறு கல்லூரியில் மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்கின்றனர். இதனை தவிர்ப்பதற்காகக் கல்லூரியின் பெயருடன் ஊர்ப் பெயரும் இடம் பெற வேண்டும் எனக் கூறியுள்ளனர். கல்லூரியில் ஒரு பிரிவில் மாணவர்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கும் போது, நன்றாகச் செயல்படும் கல்லூரிகளுக்குப் பயனுள்ளதாகவும், சரியான முறையில் செயல்படாத கல்லூரிகளுக்குப் பாதிப்பாக இருக்கும்.
பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கையில் பெரியளவில் மாற்றம் வராது. தற்போது, சரியாகச் செயல்படாத கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அது மேலும் அதிகரித்து கல்லூரி இல்லாத நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது. அது ஒரு வகையில் நல்லது. மாணவர்களுக்கு நல்லக் கல்லூரி கிடைப்பது தான் சிறந்தது. கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் கொண்டு வந்துள்ளனர். மாணவர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
ஒரு சில பிரிவுகளை மட்டும் தேர்வு செய்து செல்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பிருந்த நிலையில், அவ்வாறு இல்லாமல் மாணவர்களின் திறனுக்கு ஏற்றப் பாடப்பிரிவுகளிலும் சேர்ந்து படிக்க வேண்டும். மேலும் அதிகளவில் மாணவர்கள் நல்லக் கல்லூரியில் சேர வேண்டும். தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காகவும், தரமற்றக் கல்லூரிகளில் சமூகத்தில் இருக்கக்கூடாது என்பதற்காகவும் செய்கின்றனர். இதனால் ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் அதிகளவில் மாணவர்கள் சேர்வார்கள். அதனைத் தவிர்த்து விட்டு, மாணவர்களின் திறனுக்கு ஏற்ப கல்லூரியில் பாடப்பிரிவினை தேர்வு செய்வது நல்லது.
சில பாடப்பிரிவுகளைப் படித்தால் வாய்ப்புகள் இல்லை என நினைப்பார்கள். அது போன்ற நிலை தற்போது இல்லை. அந்தப் பாடப்பிரிகளுடன் செயற்கை தொழில்நுட்பம் போன்ற பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவுகளையும், அவர்களின் திறமைக்கு ஏற்ப எடுத்துப் படிக்க வேண்டும்.
குறைவான மாணவர்கள் சேர்ந்துள்ள கல்லூரிகள் வரும் காலங்களில் தொடர்ந்து இயங்குவது சிரமமாகி விடும். கல்லூரியின் முக்கியமான காலகட்டத்தில் தரமற்றக் கல்லூரியில் சேர்ந்து படிக்காமல் இருப்பது தான் நல்லது. பொது மக்கள் சரியான தரமற்றக் கல்லூரியில் சேராமல் இருந்தால் தானாக மூடி விடுவார்கள். தரமற்றக் கல்லூரிகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல்: தமிழகத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர் ராமச்சந்திரன் அப்டேட்!