சென்னை: தமிழகத்தில் பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு பிரத்யேக செயலி உருவாக்கபடும் என்ற அறிவிப்பு 2023-24 மானியக் கோரிக்கையில் அறிவிக்கபட்டது. குறிப்பாக கடந்த தினங்களுக்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் சென்னை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், சென்னையில் பல பகுதிகளில் மெட்ரோ பணிகள் மட்டுமல்லாது மின்சார வாரியத்தின் பணிகளும் நடைபெற்று வருவதால் பல பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இவைகள் அனைத்துமே பருவ மழைக்கு முன்னரே ஓரளவிற்காவது மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டுன் என நெடுஞ்சாலை துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதனுடைய ஒரு சாராம்சம் தான் இந்த "நம்ம சாலை" செயலி எனக் கூறப்படுகிறது.
மக்களுக்கு எப்படி பயன்படும் இந்த செயலி: பொதுவாக பருவ மழை காலங்களில் மக்களுக்கு இடையூறாக இருப்பது அவர்கள் வசிக்கும் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் மற்றும் அதிகளவு காற்று வீசும் போது சரிந்து விழும் மரங்கள், மின் கம்பங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண இந்த செயலி அறிமுகப்படுத்தபட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.
- மக்கள் செயலியின் வாயிலாக சேதமடைந்த சாலைகளின் புகைப்படங்கள் மற்றும் எந்த பகுதி என்ற விவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- இந்த பதிவேற்றம் செய்தவுடனே தகவல்கள் அந்த பகுதியினுடைய பொறியாளருக்கு இந்த செயலி வாயிலாக புகார்கள் கூறப்பட்டுள்ளது என்ற குறுஞ்செய்தியும் அவருக்கு அனுப்பப்படும்.
- புகார் தெரிவிக்கபட்ட அதிகபட்சம் 72 மணி நேரத்தில் அந்த பகுதியின் சாலையை சரிசெய்து அந்த புகைப்படத்தை அந்த பகுதியின் பொறியாளர் செயலியில் பதிவேற்றம் செய்வார்.
எப்படி இந்த செயலியில் புகார்களை பதிவேற்றம் செய்வது:
- "நம்ம சாலை" செயலியில் உள்நுழைந்தவுடனே Report pothole issues என்ற பக்கம் திறக்கும்.
- அதில் உள் நுழைந்தவுடன் யார் புகார் செய்கிறார் என்பதற்காக புகார்தாரரின் தொடர்பு எண் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அதை தொடர்ந்து REPORT POTHOLE, REPORT OTHER ROAD ISSUES, என்ற இரண்டு பக்கங்கள் இருக்கும்.
- இதில் REPORT POTHOLE பக்கம் மாவட்டத்திற்குள்ளோ அல்லது நமது பகுதியின் சேதமடைந்த சாலையின் புகைப்படத்தையோ பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அப்படி நமது பகுதி என்றால் அதிகபட்சம் 42 மணி நேரத்தில் அந்த பகுதி சரிசெய்யபடும்.
- அல்லது நெடுஞ்சாலைகளில் பள்ளம் என்றால் REPORT OTHER ROAD ISSUE என்ற பக்கத்தில் புகார்களை புகைப்படத்துடன் பதிவு செய்தால் அதிகபட்சம் 72 மணி நேரத்தில் அவைகளை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதைத் தொடர்ந்து அந்த பகுதியின் பொறியாளர் அந்த புகாரின் நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்த சாலையின் நிலையை, மக்கள் அறிந்து அதே நம்ம சாலை செயலியில் புகைப்படத்தை பொறியாளர் பதிவேற்றம் செய்வார். இவ்வாறாக பொதுமக்கள் இந்த செயலி புகார் மட்டுமின்றி புகாரின் நிலை என்ன என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக வழி வகை செய்யபட்டுள்ளது.
மழை காலத்தில் எப்படி பயன்படும் இந்த செயலி: இந்த செயலியில் பள்ளங்கள் குறித்தான புகார்கள் மட்டுமல்லாது, பேரிடர் காலங்களில் மரம் விழுதல், மின்கம்பங்கள் சரிந்து விழுதல் போன்ற புகார்களையும் தெரிவித்தால் அது குறித்தான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பொறியாளர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நிரந்தரமாக மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள சியூஜி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பணியில் பொறியாளர்கள் மட்டுமல்லாது முன்கள பணியாளர்களும் பணியாற்றுவார்கள் என்பதால் அவர்களுக்கும் இந்த செயலி மூலமாக பொறியாளர்கள் தொடர்பு கொள்ள வழிவகை செய்யபட்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த செயலி அறிமுகம் செய்யபட்டுள்ளது.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது, "எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட முடியாது. குறிப்பாக பருவமழை போன்றக் காலங்களில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள சாலைகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்தால் மட்டுமே அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
அந்த வகையில் பருவமழை காலத்திற்கு முன்பே பொது மக்கள் வசிக்கக் கூடிய சாலைகள் மட்டுமல்லாது பொது மக்கள் அதிகம் பயணம் செய்யக் கூடிய சாலைகளையும் சீர் செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கத்தின் அடிப்படையில் தான் இந்த செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்தி தங்களுடைய பகுதிகளில் உள்ள சாலைகள் மட்டுமின்றி அவர்கள் பயணிக்கின்ற சாலைகளையும் கவனத்தில் கொண்டு புகார்கள் ஏதும் இருந்தால் உடனடியாக தெரிவித்தால் உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பொதுமக்கள் பயணிக்கின்ற சாலைகள், அவர்கள் ஒரு முறை மட்டுமே இந்த சாலை வழியாக செல்கிறோம் என்று எண்ணாமல் மற்றவர்களும் இந்த சாலைகளை பயன்படுத்துகிறார்கள் என்ற ஒரு நல்ல எண்ணத்தோடு புகார்களை உடனுக்குடன் தெரிவித்தால் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு ஊரையே அமர்களப்படுத்துறோம்..! வெளியானது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரெய்லர்..!