தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித் துறையின் மூலம் ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட 412 பயிற்சி மையங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பயிற்சிகள் பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்பட்டது.
தற்போது ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் பொதுத்தேர்வு முடிந்து ஏப்ரல் மாதம் வழக்கமாக நடத்தப்படும் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. நீட் எழுதுவதற்கு தமிழ் வழியில் படித்த 4205 மாணவர்கள், ஆங்கில வழியில் படித்த 3248 மாணவர்கள் என 7 ஆயிரத்து 453 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் வருவதற்கான போக்குவரத்து வசதி இல்லாததால் கல்வி தொலைக்காட்சி மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டது.
இதற்காக முதுகலை ஆசிரியர்களை கொண்டு நீட், ஜேஇஇ போட்டித் தேர்வுக்கான பாடங்கள் பதிவு செய்யப்பட்டு கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கல்வி தொலைக்காட்சி அலுவலர் கூறும்போது, போட்டித் தேர்வுகளுக்கான பாடங்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை சிறப்பு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நீட், ஜேஇஇ போட்டித் தேர்வுகளுக்கான பாடங்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரையும், மதியம் 3 மணி முதல் மாலை 6 மணிவரையும் ஒளிபரப்பு செய்யப்படும்.
மேலும் மாலை 6 மணி முதல் மறுநாள் நாள் 7மணிவரை மறு ஒளிபரப்பு செய்யப்படும். ஒளிபரப்பப்படும் பாடங்களின் தொகுப்புகளில் மாணவர்கள் எந்த நேரத்திலும் ‘kalvi tv official’என்ற கல்வி தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பார்த்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விடைத்தாள் திருத்தும் மையங்களைச் சுத்தம் செய்ய உத்தரவு!