காய்கறி மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளை கண்காணிக்க சிறப்புக் குழு சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டது. இதில் மாநகராட்சி உதவி பொறியாளார், வருவாய் துறை அதிகாரி, காவல் துறை, வியாபாரி பிரதிநிதிகள் நான்கு பேர் உள்ளனர்.
இந்நிலையில் இந்தக் கண்காணிப்பு குழுக்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அம்மா மாளிகையில் இன்று (ஜூலை 21)ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர், "இதுவரை 5.30 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், பரிசோதனை அதிகப்படுத்தியதன் காரணமாகவும், தொற்று பாதித்தவர்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள அனைத்து மார்க்கெட்களையும் வட்டாச்சியர் அளவிலான அலுவலர்கள் தினமும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர். இதில் அனைத்து தரப்பு மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் தொற்றை குறைக்க முடியும்.
அதேபோல் மார்க்கெட்களில் உள்ள வியாபாரிகள் ஒத்துழைப்பு, மாஸ்க் அணிவது, தகுந்த இடைவெளி, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி இதுவரை நான்கு லட்சத்து 92ஆயிரத்து 149 பேர் சென்னைக்கு வருவதற்கு இ-பாஸ் விண்ணப்பித்தனர். அதில் ஒரு லட்சத்து 61ஆயிரம் 754 பேருக்கு இ-பாஸ்கள் வழங்கப்பட்டும், மூன்று லட்சத்து 29ஆயிரத்து 829 பேரின் இ-பாஸ்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 566 நிலுவையில் உள்ளது. குறிப்பாக எந்தவித உரிய காரணமும் இல்லாமல் விண்ணப்பிக்கும் இ-பாஸ்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மற்ற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களை கண்காணிக்க 16 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது . வெளிநாடு, வெளிமாநிலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வருபவர்கள் 14 நாள் தனிமைப்படுத்திவருகிறோம்.
குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, உள்ளிட்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளில் இருந்து வருபவர்களை உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'நகரா டாக்சிகள்.. வாழ்விழந்த டிரைவர்கள்'- கண்டுகொள்ளுமா அரசு!