சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (டிச.7) மாலை அல்லது இரவுக்குள்ளாக புயலாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள, தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பத்து மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவி ஆய்வாளர் சந்தீப் குமார் தலைமையில் 35 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட், மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், கயிறு, மர அறுவை இயந்திரங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என அனைத்தையும் சரிபார்த்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாடு அறை மற்றும் மாநகராட்சி கட்டுப்பாடு அறையுடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பதாகவும், தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படை தயாராக உள்ளது எனவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்(Mandous Cyclone):எங்கெங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?