சென்னை: அண்மையில் வெளியான ”அம்பேத்கர்- மோடி” புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அந்த புத்தகத்தில் அம்பேத்கரின் திட்டங்களை மோடி நடைமுறைப்படுத்தி வருகிறார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகத்தை படிக்காமல் சிலர் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசியிருப்பதாக இளையராஜாவை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் இளையராஜா தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திராவிடர் கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஏர்போர்ட் மூர்த்தி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் பட்டியலின சமூகம் குறித்து இழிவாகப் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவு கடிதம் கிடைத்த 15 நாட்களுக்குள் வழக்கு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது ஆக்ஷன் எடுக்கவில்லையென்றால் அவரது வீட்டின் முன் சிறுநீர் கழிப்போம்' - எச்சரித்த பறையர் பேரவையினர்