கிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை கட்சி நிர்வாகிகள் வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் கிராமசபைக் கூட்டங்களை உடனே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கடந்த 18ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்களது மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
வருகின்ற ஜூன் 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் அனைத்துக் கிராமங்களிலும் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதுசமயம், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இக்கூட்டங்களில் அவசியம் பங்கேற்று கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும், அவர்களது வாழ்வாதாரங்களை உறுதிசெய்யவும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இத்தோடு, மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் மீது திணிக்கப்பட்டுவரும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் குழாய் பதிப்பு, உயர் மின்னழுத்தக் கோபுரம், எட்டு வழிச்சாலை போன்ற நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகக் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற முன்மொழிந்து, அவற்றின் வாயிலாக அரசுக்கு அழுத்தமும், மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளை அறிவுறுத்துகிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.