பாஜக சார்பில் மதுரவாயலில் நடைபெற்ற 'நம்ம ஊரு பொங்கல் விழா' நிகழ்ச்சியில், பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்றார். இதற்கென மதுரவாயலில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சியில் பொங்கல் வைக்கும் விழா, விளையாட்டுப்போட்டிகள், தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு, விளையாட்டு ஏற்பாடுகள் என காணும் பொங்கலை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.
மதுரவாயல் - ஆலப்பாக்கம் சாலை சந்திப்பில் இருந்து நட்டா மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டார். பின்னர், அவர் புதிய பானையில் அரிசி இட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து 1500க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், மூத்தத் தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், கரு. நாகராஜன், நடிகை குஷ்பூ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நட்டா வருகையையொட்டி மதுரவாயல் பகுதியில் பலத்த காவல் துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
விழாவில் நட்டா 'வெற்றிவேல், வீரவேல்' என முழக்கமிட்டு, 'அனைவருக்கும் வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துகள்' எனத் தமிழில் கூறி, பேசத் தொடங்கினார். மேலும் அவர் பேசுகையில், "தமிழ்நாடு உயர்ந்த கலாசாரம் கொண்ட இடம். இங்கு பல மனிதநேயம் கொண்ட புனிதர்கள் வாழ்ந்துள்ளனர்.
திருவள்ளுவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் உரியவர். உலகின் தொன்மையான மொழி தமிழ். தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் கலாசார மேம்பாட்டிற்கு சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர்.
தமிழ்நாடு மிகவும் தெய்வீக நகரம். இங்கு மதமும், உணர்வுகளும் மதிக்கப்படுகின்றன. 63 நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் தோன்றிய இடம் தமிழ்நாடு. அதற்காகப் பெருமைப்படுகிறோம்.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது மாநிலத்தின் வளர்ச்சிக்காக 94 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியது. ஆனால், மோடி தலைமையிலான அரசு 5 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு என 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து இடம் வழங்கியதற்கு நன்றி. இதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மோடி கொண்டுள்ள எண்ணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உலக நாடுகள் கரோனாவால் பாதிக்கப்பட்டபோது, மோடியின் அதிரடி நடவடிக்கையால் இந்தியா பாதுகாப்பாக இருந்தது. பாஜக தமிழ்நாட்டில் அறிவியல் பூர்வமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதனால்தான் பல்வேறு சிந்தனைகள் கொண்டோர் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைகின்றனர். நாம் தமிழ்நாட்டில் முதன்மையான கட்சியாக உள்ளோம்" என்றார்.