சென்னை: நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ‘முத்துநகர் படுகொலை’ என்னும் பெயரில் ஆவணப்படமாக இயக்கப்பட்டுள்ளது. இதனை மெரினா புரட்சி ஆவணப்படத்தை இயக்கிய எம்.எஸ்.ராஜ் இயக்கியுள்ளார். இந்த ஆணவப்படத்தின், ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன், திரைக்கலைஞர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். அப்போது பேசிய இயக்குநர் எம்.எஸ்.ராஜ் பேசும்போது. “இது ஒரு புலனாய்வு ஆவண திரைப்படம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறோம்.
தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் மக்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறையை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த படத்தை எடுக்கிறோம் என்கிற செய்தி தெரிந்த இரண்டாவது நாளே ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில், என் மீது புகார் அளிக்கப்பட்டது.
இன்று கூட இங்கே உளவுத்துறை போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் வெளியாகாத ஒரு படத்திற்கு எதற்காக இப்படி ஒரு நெருக்கடி..? நாங்கள் நடந்த நிகழ்வை மட்டுமே படமாக எடுத்துள்ளோம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு அரசிடம் நெருக்கடி கொடுப்பதை தடுக்குமாறு கோரிக்கை வைக்க இருக்கிறோம்" என்றார்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், “இது ஒரு ஆவணப்படம் என்றாலும் ஒரு முழுநீள திரைப்படம் பார்ப்பது போல மிக நேர்த்தியாக, விறுவிறுப்பாக, நடந்த உண்மையை அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.
இந்த படம், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் எந்த இடத்திலும் புனைவு என்பதே இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக உள்ளது. அரசு பயங்கரவாதம் எப்படி அரங்கேறியது. ஒரு தனியார் நிறுவனத்தை பாதுகாப்பதற்காக அதிகார வர்க்கம் என்னென்ன முயற்சி செய்தது.
குறிப்பாக துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலை வரும்போது காவலர்கள் சாதாரணமாக ரைபிளில் மட்டுமே சுட வேண்டும், அவர்களுக்கு ஸ்னைப்பர் துப்பாக்கியை வழங்கியது யார் ?. இதில் கொல்லப்பட்ட அனைவருமே குறிவைத்து சுடப்பட்டதற்கான காரணம் என்ன?" என்றார்.
இதையடுத்து முத்தரசன் பேசும்போது, “இது வெறும் போராட்டம். படுகொலை மட்டுமல்ல சுற்றுச்சூழல் படுகொலையும் தான். தனியார் முதலாளிகள் அரசாங்கத்தையே விலைக்கு வாங்க முடியும் என்பதை காட்டும் விதமாக நடந்த நிகழ்வுதான் இது.
இந்தப் படத்திற்கு போலீசார் எதற்காக நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி ஒரு ஆவணப்படம் எடுத்ததற்காக இயக்குனர் ராஜூவை தமிழ்நாடு அரசு அழைத்து பாராட்ட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:நைஜீரியாவில் எண்ணெய் ஆலை வெடிவிபத்தில் 100 பேர் உயிரிழப்பு?