ஆகஸ்ட் 27ஆம் தேதி தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் காவல்துறையினரை தாக்கியதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் சிறைத்துறை அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது, எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளிடம் அத்து மீறுவதாகவும்; இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் புகார் மனு அளித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிறையில் உயர் பாதுகாப்பு பகுதியில் அடைக்கப்பட்டுள்ள பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் அதிகாரிகளை தாக்க வாய்ப்பில்லை. சிறைக் கைதிகளை தாக்கிய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், மனித உரிமைகள் ஆணைய விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அதிகாரிகள் தாக்கப்பட்டதாக நாடாகமாடுகின்றார்" எனக் குற்றம் சாட்டினார்.