சென்னை: மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் அபூபக்கர் சித்திக் (31). இவர் மீது கடந்த 2014ஆம் ஆண்டு, மதுரை மாநகர காவல் ஆணையரகத்தில் அடங்கிய, விளக்குத்தூண் காவல் நிலையத்தில், கொலை வழக்கு, சதி செயலில் ஈடுபடுதல், பயங்கர ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடுதல் உட்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர்.
ஆனால் அபூபக்கர் சித்திக் போலீசில் சிக்காமல், வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவானதால் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது போலீசார், நிலுவையில் உள்ள பழைய வழக்குகளுக்கான ஆவணங்களை எடுத்து, அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும், கொலை மற்றும் சதி செயல் குற்றவாளியான அபூபக்கர் சித்திக்கை தேடி கண்டுபிடித்து, கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.
அதன் படி கடந்த 2022ஆம் ஆண்டு, மதுரை மாநகர காவல் ஆணையர், அபூபக்கர் சித்திக்கை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவருக்கு எதிராக எல்.ஓ.சியும் போடப்பட்டது.
இந்நிலையில் நேற்று துபாயிலிருந்து, இலங்கை வழியாக சென்னை வரும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை அனுப்பி கொண்டிருந்தனர்.
அந்த விமானத்தில் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும், கொலை மற்றும் சதி செயலில் ஈடுபட்ட குற்றவாளியான, அபூபக்கர் சித்திக்கும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, அவர் தேடப்படும் தலைமறைவாக குற்றவாளி என்று தெரியவந்தது. இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள், அபூபக்கர் சித்திக்கை வெளியில் விடாமல் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை குடியுரிமை அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்து, போலீஸ் பாதுகாப்பும் போட்டனர்.
அதோடு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு, 9 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ள தகவலையும் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள அபூபக்கர் சித்திக்கை கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையரகத்தில் இருந்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
கொலை, சதி செயலில் ஈடுபடுதல், பயங்கர ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடுதல் போன்றவைகளில் ஈடுபட்டு, கடந்த 9 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த, தேடப்படும் குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'கூலிப், ஹான்ஸ் இல்லையா..' பட்டா கத்தியைக் காட்டி அடாவடி செய்த இளைஞர்களுக்கு வலைவீச்சு