சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி குறித்து நடிகர் ரஜினிகாந்த் முரொலிக்கு எழுதிய கட்டுரையின் சுவாரஸ்ய நிகழ்வு குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
கருணாநிதி குறித்து அறிந்தது: கருணாநிதி வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எஸ்.பி.முத்துராமன் கருணாநிதிப் பற்றி நிறைய விஷயங்களை எனக்கு சொல்லியிருக்கிறார். எஸ்.பி.முத்துராமனின் தந்தை ராம சுப்பையா திராவிட கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்தவர். அண்ணா, கருணாநிதி மற்றும் பல தலைவர்கள் செட்டிநாடு சென்றால் ராம சுப்பையா வீட்டில் தான் தங்குவார்கள். அங்குதான் பல ஆலோசனைகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். எஸ்.பி.முத்து ராமன் கருணாநிதி பற்றி சொல்ல சொல்ல அவர் மீது இருந்த மதிப்பும், மரியாதையும் அதிகமானது.
கருணாநிதி வசனத்தினால் உச்ச தொட்ட எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன்: தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர். புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி எழுதிய பராசக்தி படத்தின் அற்புதமான சமுதாய சீர்திருத்தும், புரட்சிகரமான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி, நடித்து நடிகர் சிவாஜி கணேசன் ஒரே நாளில் உச்ச நட்சத்திரம் ஆனார். எம்.ஜி.ஆர். "மருத நாட்டு இளவரசி", "மந்திரி குமாரீர்", "மலைக்கள்ளன்" போன்ற படங்களுக்கு வசனம் எழுதி அந்தப் படங்களை மிகப்பெரிய வெற்றிப் படங்களாக்கி எம்.ஜி.ஆரை நட்சத்திரமாக மாற்றினார்.
கருணாநிதி வசனத்தில் நானா? நான் 1980-ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் நம் படத்துக்கு கருணாநிதி வசனம் எழுத ஒப்புக்கொண்டார் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. எளிமையான தமிழ்வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான் கருணாநிதியின் வசனங்களை பேசி நடிப்பதா? நடக்காத காரியம்... இதற்கு நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம். தயாரிப்பாளரிடம் முடியவே முடியாது என்று கூறினேன். இதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு இடிவிழுந்த மாறி ஆயிற்று. நான் அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள், நானே அவரிடம் சொல்கிறேன் என்று கூறினேன். அவரும் வேண்டா வெறுப்பாக சரி என்று சொல்லி கருணாநிதியை சந்திக்க ஒருவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.
கருணாநிதியை சந்திக்க கோபாலபுரத்தில் உள்ள அவகுடைய இல்லத்திற்கு சென்றேன். தமிழ்நாட்டுக்கே தெரிந்த லக்ஷனமான வீடு அவருடைய உதவியாளர் சண்முகநாதன் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய படிக்கட்டுகள் மூலம் என்னை கலைஞர் இருக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றார். கருணாநிதி புன்னகையுடன்... வாங்க என்று அவருக்கே சொந்தமான அந்த கரகரப்புக் குரலில் என்னை அழைத்து நலம் விசாரித்தார். பின்பு “கதையைக் கேட்டேன்... நன்றாக இருக்கிறது. சிறப்பாக வசனங்களை எழுதிடலாம்” என்றார். நான் அவரை சார் என்று தான் அழைப்பேன். “சார் உங்கள் வசனங்களை நான் பேச முடியாது. எளிமையான தமிழை பேசவே நான் சிரமப்படுகிறேன். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை எப்படி நான் பேசுவது? என்னால் முடியாது. தவறாக நினைக்க வேண்டாம்” என்று கூறினேன். அதற்கு அவர் சிரித்து “எனக்கு யாருக்கு எப்படி எழுத வேண்டும் என்று நன்றாகவே தெரியும். சிவாஜிக்கு எழுதுவது போல எம்.ஜி.ஆருக்கு எழுதமாட்டேன்..அதேபோல எம்.ஜி.ஆருக்கு எழுதுவதைப்போல சிவாஜிக்கு எழுதமாட்டேன். உங்கள் படங்களை நான் பார்த்துள்ளேன். உங்கள் ஸ்டையில் நான் எழுதுகிறேன்" என்று சர்வ சாதாரணமாக கூறினார். எனக்கு ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தேன். இதை கவனித்த கருணாநிதி சிரித்துக்கொண்டே முன்னால் யார் வசனங்களை எழுதினாரோ அவரே எழுதட்டும்... நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்.... என்று கூறி தன் உதவியாரிடம் தயாரிப்பாளரை அழைக்கும் படி கூறினார்.
தயாரிப்பாளரிடம் "என்னுடைய வசனங்களை பேசுவதற்கு தனக்கு கஷ்டமாக இருக்கும் என்று ரஜினி கூறுகிறார். நான் அவருடைய பாணியிலேயே எழுதித் தருகிறேன் என்று சொன்னேன். அவரும் சம்மதித்தார். ஆனால் இந்த மாதம் 10ஆம் தேதி படப்பிடிப்பு என்று கூறுகிறாரே... நான் அடுத்த மாதம் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்... காலம் மிகவும் கம்மியாக இருக்கின்றது. எனக்கு ஏற்கனவே முன் நிர்ணயிக்கப்பட்ட வேலைகள் நிறைய இருக்கின்றன. ஆகையால் இந்தப் படத்திற்கு என்னால் வசனங்கள் எழுத முடியாது. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறி தயாரிப்பாளரை அனுப்பி வைத்தார். பிறகு. என்னைப் பார்த்து “என்ன ரஜினி இப்போ உங்களுக்கு திருப்தியா?” என்று கேட்டார். தயாரிப்பாளரின் மனதையும் துன்புறுத்தாமல், என்னையும் திருப்திபடுத்திய அவருடைய செய்கையால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்பும், மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. ஆனாலும் அவருடைய வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ? தவறு செய்து விட்டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்றும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது.
எம்.ஜி.ஆர் ஆடியோ: எனக்கு தெரிந்த ஒருவர். அவர் பெயர் கூற இயலாது. அவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து “இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம். நீங்கள் மட்டும் கேட்டு பிறகு என்னிடமே திருப்பிக்கொடுத்து விடுங்கள்" என்று கூறினார். அது 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு அவர்க்கும் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்கும் நடந்த தொலைப்பேசி உரையாடல் ஆகும். அதில் எஸ்.எஸ்.ஆர். அவர்கள் "அண்ணே... ஏதோ கெட்ட நேரம் அவசர அவசரமாக என்னென்னமோ நடந்துவிட்டது. வருங்காலத்தில் கழகத்திற்கு இதனால் பெரிய இழப்பு ஏற்படும். வேறு யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டும் ஒரு பொது இடத்தில் சந்தித்து மனம் விட்டுப்பேசினால் எல்லாம் சரி ஆகிடும். கருணாநிதியுடன் நான் பேசுகிறேன். எனக்காக இதை செய்யுங்கள் என்று கூறுவார். அதற்கு எம்.ஜி.ஆர். “இல்லை தம்பி., என்னுடைய விசுவாசிகள் எனக்கு ஆதரவாக போராட்டங்கள் செய்து என்னுடைய அபிமானிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்கள். நான் திரும்பி கட்சியில் சேர்ந்தால் என்னுடைய அபிமானிகளை கட்சியில் உள்ளவர்கள் முந்தைய மாதிரிப் பார்க்க மாட்டார்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவார்கள் அவர்கள் எல்லாம் உதிரிப்பூக்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்காகவே நான் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். எனக்கு வேறு வழியில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதே" என்று அந்த உரையாடல் முடிந்திருக்கும்.
கருணாநிதியின் நிதானம்: எம்.ஜி.ஆர், அ.தி.மு.க. என்ற கட்சியை உருவாக்கினார். அதன்பின் யார் யார் எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சொன்னார்களோ... அதில் பல பேர் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து விலகி எம்.ஜி.ஆர். பக்கம் போனார்கள். அதனால் கருணாநிதி இதயம் எவ்வளவு வேதனையில் துடித்திருக்கும்? எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா இவரை நினைத்து தான் சொன்னாரோ? எவ்வளவு வேதனைகள், சங்கடங்கள். ஏமாற்றங்கள், துரோகங்கள் என அத்தனையும் தாண்டி தொண்டர்களுக்கு அவர் எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள், கட்டுரைகள், சினிமாவில் எழுதிய வாசனங்கள். அவர் செய்த சுற்றுப்பயணாங்கள். மேடைப்பேச்சுகள். 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் கட்டுக் கோப்பாக ஒரு தனி ஆளாக கட்சியை வழி நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால் அது ஒரு மாபெரும் புரட்சி, பின் அவரைப்பற்றி எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம்.
அவருடைய இந்த நூற்றாண்டில் அவரை நினைத்து, அவருடன் நான் கழித்த எத்தனையோ தருணங்களை ஞாபகப்படுத்தி, அவர் வாழ்ந்த அதே காலத்தில் நானும் வாழ்கிறேன். அவருடைய இதயத்தில் எனக்கென்று ஒரு தனி இடம் இருந்தது. அதனால்தான் எந்த ஒரு விழாவிலும் என்னை அவர் அருகில் அமர வைத்து மகிழ்வார் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது.
வாழ்க கருணாநிதியின் புகழ்!!! வணக்கம்!!! என முரசொலி வெளியிட்ட கட்டுரையில் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.