சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மருத்துவ முகாம் மற்றும் அதன் அருகே உள்ள வீடுகளில் மேற்கொண்டு வரும் கரோனா தொற்று பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையை பொறுத்தவரை கரோனா தடுப்பு நடவடிக்கை பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
நாள்தோறும் நடைபெறும் மருத்துவ முகாமில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறுகிறார்கள். சென்னை மக்கள் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது, மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது போன்றவற்றினை செய்ய வேண்டும்.
இரண்டு வார ஊரடங்கு நல்ல பலன் கொடுத்துள்ளது. இந்த 15 நாள் காலகட்டத்தில் 1.5 லட்சம் பேருக்கு கூடுதலாக பரிசோதனை மேற்கொண்டுள்ளோம்.
இதில் 20 விழுக்காட்டினர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் மூலம் பிறருக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
தற்போது மழைக்காலம் வர இருப்பதால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது கூடுதல் சவாலாக இருக்கும். மழை ஆரம்பித்தால் ஊழியர்கள் விரைவில் பணிக்கு வர முடியாது .
டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரிக்கும். இந்த பிரச்னைகளை தவிர்ப்பதற்காக மாநகராட்சி தயாராகி வருகிறது" எனத் தெரிவித்தார்.