சென்னை: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் கனகராஜ். இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் மயக்கவியல் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு ஞானமணி என்ற மனைவி உள்ளார். இருவரும் சென்னை அடையாறில் உள்ள இந்திரா நகர் 5வது குறுக்குத் தெருவில் தனியாக வசித்து வந்தனர்.
இவர்களுக்கு வாரிசு இல்லாததால் தனியாக வசித்து வந்த நிலையில் மருத்துவர் கனகராஜுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். அதன் பிறகு வீட்டில் தனியாக வசித்து வந்த ஞானமணி இரவு நேரத்தில் மட்டும் தனது சகோதரனின் மகனை அழைத்து பாதுகாப்புக்காக தங்க வைத்துள்ளார்.
கனகராஜ் உயிருடன் இருக்கும் போதே கணவன் மனைவி இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் கனகராஜின் தூரத்து உறவினரான கனக சண்முகம் என்பவரை கடலூரில் இருந்து வீட்டில் வேலை செய்ய பணியமர்த்தி இருக்கிறார்கள். கனகராஜை கழிவறைக்கு கூட்டிச் செல்லவும் அவரை பராமரிக்கும் பணியிலும் கனக சண்முகம் வேலை செய்து வந்துள்ளார்.
கனகராஜ் உயிருடன் இருக்கும் போதே வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பென்ஷன் வாங்குவதற்கான ஆவணங்கள், வீட்டின் ஆவணங்கள் என ஒட்டுமொத்த பொருட்களையும் ஒரு டிராவல் பேக்கில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். அப்போது டாக்டர் கனகராஜ் எந்த சமயம் என்றாலும் இந்த பையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என தனது மனைவி ஞானமணியிடம் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்துள்ளார்.
கனகராஜ் இறந்தவுடன் வீட்டில் தனியாக இருந்து வந்த ஞானமணியை ஏமாற்றி வீட்டில் இருந்த ட்ராவல் பேக் மட்டுமில்லாமல் மற்ற பொருட்கள் அடங்கிய மூன்று ட்ராவல் பேக்கை கனக சண்முகம் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. கனகராஜ் உயிருடன் இருக்கும்போது தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்ய வரும் கட்டணங்களை பணமாக கொண்டு வராமல் அவ்வப்போது நகைகளாக வாங்கி சேமித்து வைத்துள்ளார்.
இதன் மூலம் சுமார் 100 சவரனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் சிறுக சிறுக சேமித்து தனது வீட்டில் பாதுகாக்கப்பட்ட நிலையில், வேலைக்காக வந்த கனக சண்முகம் மூதாட்டி ஞானமணியை ஏமாற்றி வீட்டில் இருந்த ஒட்டுமொத்த பொருட்களையும் கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் தூரத்து உறவினர் தானே அவரிடம் கேட்டால் கொடுத்து விடுவார் என தொலைபேசி மூலம் மருத்துவரின் மனைவி ஞானமணி கனக சண்முகத்திடம் கேட்டதாக கூறப்படுகிஒது. ஆரம்பத்தில் தான் எடுக்கவில்லை என வீட்டுக்கு வந்து ஜாலம் செய்த கனக சண்முகம் பின்பு, தான் தான் எடுத்ததாகவும் அதை திருப்பிக் கொடுக்க மாட்டேன் எனவும் மூதாட்டி ஞானமணியை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாக ஞானமணி சொன்னதும், சிபிஐ இடம் போய் கூட புகார் கொடு என்னை ஒன்றும் செய்ய முடியாது, என மிரட்டியதாக கூறப்படுகிறது. நகை கூட வேண்டாம் தனது கணவரின் வங்கிக் கணக்கு புத்தகம், பென்ஷன் வாங்குவதற்கான சான்றிதழ்களை மட்டும் கொடுத்துவிடு என கெஞ்சி கேட்டும் கொடுக்காமல் மிரட்டியதால் வேறு வழி இன்றி மூதாட்டி ஞானமணி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கனக சண்முகத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனி அருகே வழக்கறிஞர் என கூறி பண மோசடி செய்த நபர் கைது!