மக்கள் நீதி மய்யத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் (பிப். 11) அன்று சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கமல், "நேர்மையாக இருக்க முடியும், நேர்மையாக அரசியல் செய்து வெற்றி பெறமுடியும் என்பவர்கள் மட்டும் என்னுடன் இருங்கள் அதில் சற்று அவநம்பிக்கை இருந்தாலும் கதவு திறந்து இருக்கிறது நீங்கள் செல்லலாம்.
நம்முடன் களப்போட்டியில் இருப்பவர்கள் ஸ்டாலின் & ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ற அபூர்வ சகோதரர்கள். அப்புறம் கமல் ஹாசன் என்ற உம்மவர்" என்றார்.
மீண்டும் ஒரு மக்கள் நல கூட்டணி
அன்றில் இருந்து பத்தாவது நாள், பிப்.21 அன்று மநீம 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய கமல், "திமுகவிலிருந்து தூதர்கள் மூலம் கூட்டணிக்கு அழைப்பு வந்தது. ஆனால் தூதர்களிடம் எல்லாம் நாங்கள் பேசுவதில்லை, திமுக தலைமை நேரடியாக அழைப்பு விடுத்திருந்தால் பேசி இருப்போம். நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி மலரும் என்றுதான் தோன்றுகிறது" என்றார். இருப்பினும் அந்த தூதர்கள் யார் என்று அவர் கூறவில்லை.
சீரமைப்போம் தமிழகத்தை, தலைநிமிரட்டும் தமிழகம், கமல் காலத்தின் கட்டாயம் என்று பரப்புரையை தொடங்கிய கமல், அன்று தமிழ்நாட்டை காக்க வந்த ஆளவந்தானாக திகழ்ந்த கமல், இன்று கூட்டணியின் மூலம் மூன்றாவது அணி அமைக்கும் இடத்தை நோக்கி நகரும் நிலையில் இருக்கிறார்.
மக்கள் நம்பினர்
அவர் கட்சி தொடங்கியதற்கான காரணமாக சொன்னதை படித்த, நகர்ப்புற மக்கள் பலரும் நம்பினர். அதன் விளைவாக, 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய 12 தொகுதிகளிலும், கமலின் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
2019 மக்களவை தேர்தலில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, போன்ற நகரப்பகுதிகளில் கமல் கட்சி, நல்ல வாக்கு வாங்கியிருக்கிறது. மொத்தம் 34 மக்களவை தொகுதிகளில் 6 சதவிகிதமும், 15 தொகுதிகளில் 10 சதவிகிதமும், 6 தொகுதிகளில் 13 சதவிகிதமும் ஓட்டு வாங்கியுள்ளனர். சராசரியாக பார்த்தால் ஆறு விழுக்காடு வாக்கு வங்கியை அவர்கள் வைத்திருக்கின்றனர்.
பாஜக வீழ்த்திய கமல்
மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு வங்கி இந்தத் தேர்தலிலும் தாக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரது வாக்கு வங்கியை பார்க்கும்போது திமுக, அதிமுக மற்றும் இதர கட்சிகளின் மாற்று சக்தியாக கமலை மக்கள் கருதியிருக்கிறார்களா என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக நகர் மற்றும் புறநகர் பகுதியில் கமல் பெற்ற வாக்குகள் என்பது மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்றும் கூறுகின்றனர்.
திமுக கூட்டணியில் கமல்?
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக்கொண்ட கமல் ஹாசன் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எதிர்வரும் தேர்தல்களில் அவருக்கு இந்த வாக்கு வங்கி இருக்குமா என்று சந்தேகத்தை கிளப்புகின்றனர் மய்யத்தினர். இப்படி மாற்றத்தின் முகமாக முன்னிறுத்தப்பட்ட பல தலைவர்கள் பிற்பாடு அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைக்கும்போது அது அவர்களுக்கு அரசியல் வீழ்ச்சியை கொடுத்துகிறது என்று கடந்த கால வரலாறுகளையும் அசைபோடுகின்றனர் அவர்கள்.
வளர்பிறையா தேய்பிறையா
குறிப்பாக, ’தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2011 தேர்தலில் எடுத்த அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவு, ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த அவரது அரசியல் வாழ்வுக்கு தடை புள்ளியாக அமைந்தது. வளர்பிறையாக வளர்ந்த தேமுதிக எனும் இயக்கம் தேய்பிறையாக மாறிய தருணம் அது. இதையெல்லாம் ஒன்றும் அறியாதவர் அல்ல கமல் ஹாசன்’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அதுமட்டுமின்றி, நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகிவருகிறது. அதனை கமல் ஹாசனும் கூறியிருக்கிறார். எனவே, 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணியாக விஜயகாந்த் தலைமையில் மக்கள் நல கூட்டணி களமிறங்கியதுபோல், கமல் தலைமையில் ஒரு அணி இறங்குமா? அந்த அணியை இயக்குபவராக இருப்பாரா கமல்?