சீனாவில் உருவான கரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்தியாவில் பரவிவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மக்கள் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களில் தவித்துவருகின்றனர்
இதனையடுத்து இந்தோனேசியாவில் 400-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் சிக்கித்தவித்துவருவதாக இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், “இந்தோனிசியாவில் கொரோனா வேகமாகப் பரவிவருகிறது. அதனால், தமிழ் மக்கள் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள தமிழகம் திரும்ப விரும்புகிறார்கள்.ஆனால், விமானப் போக்குவரத்து இல்லாததால் தமிழகம் திரும்ப இயலவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மு.க. ஸ்டாலின், “இந்தோனேசியாவில் தமிழ்நாட்டுக்குத் திரும்ப விரும்பும் 430 குடும்பத்தினர் சிக்கித் தவித்துவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதில் தலையிட்டு அவர்களை மீட்டு தமிழ்நாடு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...கரோனா வைரஸ்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சலவை தொழிலாளர்கள்