பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு இதனை பார்ப்பதற்கான வசதிகளை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.
ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால், இந்த அறிவிப்பு பொங்கல் விடுமுறைக்காக வெளியூர் செல்பவர்கள் இடையே குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பொங்கல் விடுமுறை அன்று மாணவர்களை பள்ளிக்கு வரக் கட்டாயப்படுத்தினால் போராட்டம் நடத்தப்படுமெனவும் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விளக்கமளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் யாரும் ஜனவரி 16ஆம் தேதி பள்ளிக்கு வரவேண்டியதில்லை எனவும், அப்படியான எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லையென்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் உரை கேட்க மாணவர்கள் மாட்டுப் பொங்கலன்று பள்ளிக்கு வருமாறு உத்தரவிடவில்லை என, கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, முதலமைச்சரும், அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.
அப்படி எனில், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரையாகக்கூட இன்றி, ஏன் செயல்முறை ஆணையாக நேற்று வெளியிட வேண்டும்? முதலமைச்சரும், அமைச்சரும் தரும் பதிலைப் பார்த்தால் பள்ளிக் கல்வித் துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது! எனவே, இந்த விவகாரத்தில் வெறும் மறுப்பையும், மழுப்பலையும் விட்டுவிட்டு முறையான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல் உலகக்கோப்பை நாயகனுக்கு கிடைத்துள்ள புதிய கௌரவம்!