திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், “மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மிகவும் காலதாமதமாக இப்போது அரசு ஆணை வெளியிட்டிருக்கிறது. சமூகநீதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசிடம் ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு உரிமையைப் போராடிப் பெற வேண்டிய அவல நிலைமை தொடர்கிறது.
இந்த உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் கூட திமுக சார்பில் குரல் எழுப்பிய பிறகே அதற்கு ஒப்புதல் தெரிவித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த உள் இடஒதுக்கீடு விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் செயல்படுத்தப்படாது என்ற அரசின் முடிவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உள் இடஒதுக்கீடு என்று அறிவித்து 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் காவு கொடுத்திருப்பது மன்னிக்க முடியாத துரோகம். ஆகவே மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில், சமூகநீதியின் பயனை அரசு மருத்துவர்கள் பெறும் வகையில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குட்கா விவகாரம்: டிச. 2இல் இறுதி விசாரணை!