சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைகழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சரும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
மேலும் பத்மவிபூஷன் பி.சுசிலா மற்றும் இசைக் கலைஞர் பி.எம் சுந்தரம் ஆகிய இருவருக்கும் மு.க ஸ்டாலின் டாக்டர் பட்டங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் இசையில் உள்ள ஈடுபாட்டையும், இசை துறையில் தனது குடும்பத்தினர் எந்தெந்த வகையில் பயனித்துள்ளனர் என்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
கருணாநிதியும் இசையும்: இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கருணாநிதி பாடல்களை பாடியது இல்லையென்றாலும், பாடல்களை எழுதியுள்ளார். இசை மீது அதிக ஈடுபாடு கொண்டவரால் தான் பாடல்கள் எழுத முடியும். இது மட்டுமில்லாமல் பாடல்களில் ஏதும் தவறு இருந்தால் கூட உடனே அதை குறிப்பிட்டு சொல்லக்கூடிய நுணுக்கங்களை அறிந்தவராகவும் இருந்தார்.
முத்துவேலரும் இசையும்: தொடர்ந்து பேசிய முதல்வர் இசைக்கும், என் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உண்டு. என்னுடைய தாத்தா முத்துவேலர் பாட்டு எழுதுவதில் மட்டுமல்லாமல், பாட்டு பாடுவதிலும் வல்லவர். அதே போல தான், மறைந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கருனாநிதியும், கவிதைகள் மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்களை கூட எழுதி இருக்கிறார். அவர் பாட்டு பாடுவது இல்லையே தவிர, அனைத்து இசை நுணுக்கங்களும் அறிந்தவராக இருந்தார்.
ஸ்டாலினும் இசையும்: இசையை கேட்டவுடனே, அதில் சரி எது, தவறு எது என்று சொல்லிவிடுவார் அந்தளவுக்கு இசை துறையில் வல்லமை பெற்றிருந்தார். என்னுடைய மாமா ‘தமிழிசைச் சித்தர்’ சிதம்பரம் ஜெயராமன் ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார். அந்த வகையில் எனக்கு இசையோடு நெருங்கிய உறவு இருக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: "பி.சுசீலாவின் குரலில் மயங்கியவர்களில் நானும் ஒருவன்" - பாட்டு பாடி பாராட்டிய முதலமைச்சர்