சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.8.2022) சென்னை, கஸ்தூரிபாய் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவிற்கு, 75ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் “ சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா” என்று பெயர் சூட்டப்பட்ட பூங்காவின் பெயர்ப்பலகையைத் திறந்து வைத்து, பூங்காவினைப் பார்வையிட்டார்.
தமிழ்நாடு நகர்ப்புறசாலை உட்கட்டமைப்பு நிதியிலிருந்து (TURIF) ரூ.18.71 கோடி செலவில் கஸ்தூரிபாய் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் அடர்வன காடுகள், நடைபாதை, மிதிவண்டிப்பாதை மற்றும் சுற்றுப்புறத்தை ஆகியவற்றை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பூங்காவின் மொத்த நீளம் 2.1 கி.மீ ஆகும். இப்பூங்கா முதலமைச்சரால் 12.5.2022அன்று திறந்து வைக்கப்பட்டது.
இப்பூங்காவில், நடைபாதை, மிதிவண்டிப் பாதை, அடர்வன காடு (Miyawaki Forest), சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், பாரம்பரிய மரங்கள், பூந்தொட்டிகள், எல்.ஈ.டி விளக்குகள், சுவர் ஓவியங்கள், கலை நயமிக்க சிலைகள், செயற்கை நீரூற்று, ஊட்டச்சத்து தோட்டம், இறகு பந்து மைதானம் போன்ற சிறப்பான வசதிகள் உள்ளன.
இன்று(ஆக.15) முதலமைச்சர், “ சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா” என்று பெயர் சூட்டப்பட்ட இப்பூங்காவின் பெயர்ப்பலகையை திறந்து வைத்து, மரக்கன்றை நட்டு வைத்தார். மேலும், சிறுவர்களின் சிலம்பாட்ட பயிற்சிகளையும், திறந்தவெளி உடற்பயிற்சி பகுதியையும், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதியையும், ஸ்கேட்டிங் பயிற்சி பகுதியையும் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, மக்களவை உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: என் நாட்டை நேசிக்கிறேன்.. அரசாங்கத்தை அல்ல.. பி.சி. ஸ்ரீராம் ட்வீட்