முதலமைச்சர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மரணத்திற்கும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று, முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஐந்து பேருக்கும், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஐஏஎஸ் அலுவலர்கள், ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அரசு அலுவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கரோனா வைரஸ் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் காவலர்கள் பலர் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சென்னை மேற்கு மாம்பலம் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாலமுரளி (47), கரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
உடல் நலம் தேறி வந்த காவல் ஆய்வாளர் பாலமுரளி திடீரென்று இன்று (ஜூன் 17) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் காவலர் என்பதால் காவல்துறையினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் மந்தமான நடவடிக்கையால் இதுபோன்ற இறப்புகள் நிகழ்வதாக குற்றச்சாட்டு ஒரு பக்கம் எழுந்துள்ளன.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன், காவல் ஆய்வாளர் பாலமுரளி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "முதலமைச்சரின் தனிச்செயலாளர் தாமோதரன் கோவிட்-19 காரணமாக இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள். அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்களின் பாதுகாப்பை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்திட வேண்டும். இனி ஒரு முன்களப் பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது.
சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, கோவிட்-19 காரணமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது உயிர் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகிறேன். மக்களைக் காக்கும் பணியில் இருந்த ஆய்வாளரே உயிரிழக்கிறார். இத்தகையோரின் பாதுகாப்பை எப்பொழுது இந்த அரசு உறுதிப்படுத்தும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ராஜிவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 15ஆவது முறையாக பரோல் நிராகரிப்பு!