சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் எதிர்பாராதவிதமாக காயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிதியுதவியை (MK Stalin Announced a Relief of Rs 3 lakh) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.16) அறிவித்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இன்று ஐந்து சுற்றுகள் முடிவில் 9 காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தில் இருந்த பாலமேடு கிராமத்தைச் சார்ந்த அரவிந்த் ராஜ்(24) என்னும் மாடுபிடி வீரர், யாரும் எதிர்பாராத விதமாக வாடிவாசலிலிருந்து வெளியே வந்த காளையின் தாக்குதலால் படுகாயமடைந்தார்.
பின் அவரை அங்கிருந்த மருத்துவக்குழுவினர் மீட்டு முதலுதவி அளித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை மோதியதில் பார்வையாளரான புதுக்கோட்டை மாவட்டம் கண்ணகோனன்பட்டியைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் (25) என்பவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அரவிந்த் ராஜ் மற்றும் அரவிந்த் இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தெரிவித்ததோடு, தலா மூன்று லட்ச ரூபாய் நிவாரண நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை தாக்கியதில் வீரர் உயிரிழப்பு