நடப்பு கல்வி ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. முதல் நாளான இன்று (நவ.18) அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதில் 256 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலையில் இருந்தே, பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பெற்றோர்களும் மாணவர்களும் வரிசையில் காத்திருந்து தங்களுக்கான இடங்களை தேர்வு செய்தனர்.
முதல் நாள் கலந்தாய்வை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 405 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் கிடைக்கும். கலந்தாய்வு முழுமையாக வெளிப்படையாக நடைபெறுகிறது. அனைத்து மாணவர்களின் உண்மை சான்றிதழ்களும் முழுமையாக பரிசீலிக்கப்பட்ட பின்பே, அவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். கலந்தாய்வில் முறைகேடு நடப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை.
மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள் அனைவரிடமும் தவறான சான்றிதழ் அளித்து சேர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து உறுதிமொழி பெறப்பட்டுள்ளது. இருப்பிடச் சான்றிதழ் தவறாக அளிக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்ற தீர்ப்பினை சுட்டிக்காட்டியுள்ளோம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதிக்கீடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வரலாற்று சிறப்புமிக்க கனவு திட்டம். 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் கலந்து கொண்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வில் நீட் தேர்வில் எளிதில் வெற்றி பெற்றுவிடவில்லை. அனைவரும் தனியார் பயிற்சி மையங்கள் அல்லது 2 முதல் 3 ஆண்டுகள் வீட்டில் இருந்து படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தயார்