நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (மே 14) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர் பிரச்னை, நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்து துறை சார்ந்தவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
இதன்பின்னர், அமைச்சர் வேலுமணி வழங்கிய அறிவுறைகள்:
• சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 650 குடிசைப் பகுதிகளில் வசித்து வரும் 26 லட்சம் பேருக்கு மாநகராட்சி சார்பில் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
• இப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுமார் 50 லட்சம் முகக் கவசங்கள் இன்று முதல் வழங்க வேண்டும்.
• குறிப்பாக பணியாளர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து, வீடுகள் தோறும் சென்று பாதுகாப்புடன் பணிபுரிவது குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
• பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் பணிகள், நீராதார பணிகள் மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு பணிகள் தொடங்க வேண்டும்.
• அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் சூடான விலையில்லாமல் சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
• தினசரி காய்கறி சந்தைகளில் செயல்பாடு மற்றும் தள்ளுவண்டிகளில் தெருக்களில் சென்று காய்கறிகளை பொதுமக்களுக்கு இடைவெளியுடன் விற்பனை செய்வதைக் கண்காணிக்க வேண்டும்.
• அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் கையுறை முகக் கவசம் போன்று பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
• கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழு சார்பில் 60 லட்சம் முகக் கவசம் தயாரிப்பு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு 60 லட்சம் முகக் கவசங்கள், 80 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி மற்றும் 60 ஆயிரம் லிட்டர் கை கழுவும் திரவம் தயாரிக்கப்பட்டுள்ளது. தூய்மை காவலர்களுக்கு குறைந்த விலையில் இதுவரை 7 லட்சத்து 59 ஆயிரத்து 130 கவசங்கள், 12 ஆயிரத்து 340 லிட்டர் கிருமிநாசினி 28 ஆயிரத்து 547 லிட்டர் கை கழுவும் திரவம் சோப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 34 ஆயிரத்து 844க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுவினர், உள்ளாட்சி அமைப்புகள் காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உடன் இணைந்து உழவர் சந்தை காய்கறி மற்றும் பொது விநியோக கடைகளில் சமூக இடைவெளியை உறுதி செய்தல், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஊரகப் பகுதியில் பயிற்சி பெற்ற 540 இளைஞர்கள், அரசு மருத்துவமனைகளில் நலவாழ்வு பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்களை கொண்டு 6 லட்சம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நகர்புறங்களில் வாழும் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,1000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'ஜெயஸ்ரீ கொலைக் குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும்' - பிரேமலதா விஜயகாந்த்!