சென்னை: ஒடிசாவில் ஏற்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை துரிதமாக ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான குழுவினர் சென்றிந்தனர். ரயில் விபத்தில் சிக்கிய பெருமளவிலான தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் இன்று (ஜூன் 4) சென்னை திருப்பினர்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோரமண்டல் ரயில் விபத்தில் தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்ககூடும் என்று வந்த தகவலின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னையும், அமைச்சர் சிவசங்கர் மேலும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசா செல்ல அறிவுறுத்தினார். இதன் அடிப்படையில் ஒடிசா சென்ற நாங்கள் அங்கு ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கும் மருத்துவமனையில் நேரில் ஆய்வுசெய்து, அங்கு தமிழர்கள் உள்ளார்களா என்பதை கேட்டறிந்தோம்.
ஆனால் அங்கு யாரும் சிகிச்சையில் இல்லை. அதேபோல உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தோம், அங்கும் தமிழர்கள் இல்லை என்ற தகவல் கிடைத்தது. மேலும் அங்குள்ள அரசு அலுவலர்களுடன் ஆலோசனை செய்தோம். அவர்களும் தமிழர்கள் பாதிக்கப்படவில்லை என்பதை தெரிவித்தனர். அதன் பிறகு முதலமைச்சருடன் காணொலி காட்சி வாயிலாக கலந்து ஆலோசனை செய்தோம். பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த 127 பேரில் 28 பேர் தமிழர்கள் என்கிற விவரம் வெளியானது.
நாங்கள் இன்றைக்கு பிற்பகல் ஒரு மணிவரை அங்கு இருந்து தொடர் ஆய்வில் ஈடுபட்டோம். ஒடிசா மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்கும் நேரில் சென்று விசாரித்தோம். அங்கும் தமிழர்களை காணவில்லை என்றும் எந்த அழைப்பும் வரவில்லை என தெரிவித்தனர். முன்பதிவு செய்திருந்த 28 பேரில் 8 பேரை மட்டும் தொடர்புகொள்ள முடியாத நிலை பிற்பகல் வரை இருந்தது. அவர்களில் 3 பேரை தொடர்புகொண்டு விட்டனர். இதனை அவர்களுடன் பயணித்த நபர்கள் மூலம் ரயில்வே காவல்துறை உறுதிசெய்து நம்மிடம் தெரிவித்துள்ளனர்.
நம்முடைய அதிகாரிகள் ஒடிசாவில் தங்கி உள்ளனர். இன்னும் சில மணிநேரங்களில் நல்ல தகவல்கள் வரும். தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு வருமாறு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதற்கான தெளிவு கிடைத்துவிட்டது. இன்னும் 5 பேரை மட்டும் தொடர்புகொண்டு விட்டால், தமிழர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகிவிடும். விரைவில் நல்ல செய்திவரும் என நம்புகிறோம்.
இந்த விபத்து நடந்திருக்க கூடாது. எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிந்து ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை ஒன்றிய அரசு செய்யும் என நம்புகிறோம். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் இதுபோன்ற விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும். இதை எங்களுடைய துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா நேற்றே தெரிவித்து இருந்தார்.
எங்களுக்கு ஒடிசா மாநில அரசு சார்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினர். தமிழ்நாட்டு மக்கள் குறித்து நாங்கள் கேட்ட விவரங்கள் அனைத்தையும் வழங்கி, சிறப்பாக செயல்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தது, உயிரிழந்தவர்களின் உடல்களை காண நேரில் சென்றது என இதுவொரு வேதனையான அனுபவம்" என்று இந்த கோர விபத்து குறித்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கிரீன் சிக்னல் கிடைத்த பிறகே ரயிலை இயக்கினேன்" - கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநர்!