சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக சென்னை மாநிலக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக ஆண்டுதோறும் பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்ச்சி பெறும் வகையில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள மாநிலக் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜனவரி 18) தொடங்கி வைத்தார்.
இந்த தொடக்க விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இக்கல்லுாரியில் நிரந்தர பயிற்சி மையம் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கு அதிக பயனளிக்கும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.30 முதல் 5.30 வரையும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.
இப்பகுதியை சார்ந்த மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது. மாநிலக் கல்லூரியில் சிறிய நூலகம் அமைக்கப்பட்டு பயிற்சி வகுப்புகளின் ஒரு பகுதியாக தொடர் தேர்வுகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து SSC, TNPSC தேர்வுகள், TNUSRB, IBPS மற்றும் RRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய எஸ்.ஐ-யை பார்க்கச் சென்ற பெண் தலைமைக் காவலர் விபத்தில் பலி