சென்னை: சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (செப்.09) நடைபெற்றது.
அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த கருத்துக்களை தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததால் ஏராளமான முதலீடுகள் கிடைத்ததாகவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போது நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி தமிழ்நாட்டுக்கு முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கப் பெறவில்லை.
அதிமுக அரசு கூறியிருந்ததில், வெறும் 25 விழுக்காடு முதலீடுகள் மட்டுமே வந்துள்ளது. மீதம் எல்லாம் ஏட்டளவில் தான் உள்ளது.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்திருந்தால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி 100 விழுக்காடு முதலீடுகள் வந்திருக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு!