சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.26) கேள்வி நேரத்தில் பேசிய பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன், "கடலூர், கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முந்திரி அதிகமாக விளைகிறது. ஆனால் லட்சக்கணக்கான முந்திரி பழம் வீண் ஆகிறது.
கடந்த கருணாநிதி ஆட்சியில், முந்திரி பழங்களை கொண்டு தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனக் கேட்டேன். அதற்கு ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு கோவா அனுப்பப்பட்டது. அங்கு முந்திரி பழங்களை கொண்டு மதுபானம் தயாரிக்கப்படுகிறது.
நாம் அதுபோல் செய்யாமல், இதே முந்திரி பழங்களை கொண்டு தென் ஆப்ரிக்காவில் ஊட்டச்சத்து பானம் தயாரிக்கப்படுகிறது. அது உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆகவே, அது போன்ற ஒரு தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டார்.
இதற்குப் பதில் அளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "உற்சாக பானம் இல்லையென்றாலும், ஊட்டச்சத்து பானமாவது தயாரிக்க வேண்டும் என உறுப்பினர் கேட்கிறார். இதை வணிக ரீதியாக தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும். முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழா - ஸ்டாலின்