சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை கலைஞர் நகர் அரசு, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஆய்வுமேற்கொண்டார். கரோனா பிரிவுகளுக்கு முழு உடல் கவச உடையணிந்து சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிகிச்சையில் இருந்த கரோனா நோயாளிகளிடம் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மா. சுப்பிரமணியன், "கலைஞர் நகர் அரசு மருத்துவமனையில் உள்ள 100 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிசெய்யப்பட்டுள்ளது. இரண்டு கிலோ லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டும் பணி நடைபெறுகிறது. மேலும் அம்பத்தூர் தனியார் நிறுவனம் மூலம் ஆக்சிஜன் ஜெனரேட்டர் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
6 கிலோ லிட்டர் ஆக்சிஜன் டேங்க்
கலைஞர் நகர் அரசு மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பு விழுக்காட்டைக் கண்டறிந்து சான்றளிக்கும் பிரிவுக்குத் தனி சாலை ஏற்படுத்தப்பட உள்ளது. இங்கு ஆறு கிலோ லிட்டர் ஆக்சிஜன் டேங்க் நிறுவப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒன்றிய பொதுப்பணித் துறை சார்பில் 70 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர் அமைக்கும் பணி தொடங்கி, 20 இடங்களில் நிறுவப்பட்டுவிட்டது. தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் 40 இடங்களில் ஆக்சிஜன் செறிவூட்டி நிறுவப்படுகிறது.
சென்னையில் பெரிய மருத்துவமனைகளைத் தவிர்த்து 100 படுக்கைகள் கொண்ட பிரிவில் கலைஞர் நகர், அண்ணா நகர், பெரியார் நகர், தண்டையார் பேட்டை மருத்துவமனைகளில் 600 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
குழந்தைகளுக்கான சிகிச்சை வார்டுகள் திறப்பு
மூன்றாம் அலை பாதிப்பு ஏற்பட்டால் சிறிய மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை வழங்க போதுமான ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இஎஸ்ஐ மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இஎஸ்ஐ மருத்துவமனையில் 12 பேர் தொற்று பாதிப்புடன் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்தோம். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரி சேர்க்கையின்போது தகுந்த கரோனா பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ராஜா முத்தையா மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இரண்டு மருத்துவப் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக் கட்டணம் தொடர்பாக இருமுறை பேசப்பட்டுள்ளது. இரண்டு பல்கலைக்கழகங்களையும் அரசு ஏற்று நடத்தும் நடைமுறை விரைவில் தொடங்கும்.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைக்கப்படும்
கரோனாவிலிருந்து இன்னும் மீளவில்லை, மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திலிருந்து (ஐசிஎம்ஆர்) வந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்திற்குள் கொண்டுவரப்படும்.
ஒன்றியத் தொகுப்பிலிருந்து இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வந்துள்ளன. தற்போது, மூன்று லட்சத்து 42 ஆயிரத்து 820 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தற்போதுள்ள தடுப்பூசிகள் நாளை மதியத்திற்குள் தீர்ந்துவிட வாய்ப்புள்ளது. தடுப்பூசி வந்தவுடன் அரை மணி நேரத்தில் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் இலக்கைக் காட்டிலும் அதிக தடுப்பூசி செலுத்தியுள்ளதாக பிரதமர் பாராட்டியுள்ளார். நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றியது யார் என்பது மக்களுக்குத் தெரியும். 2011இல் நீட் அறிமுகமானபோது திமுக ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெற்றது.
13 மாணவர் மரணம் - காரணம் எடப்பாடியே!
திமுக ஆட்சியில் இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு எட்டியே பார்க்கவில்லை. சிவப்புக் கம்பளம் விரித்து நீட்டை கொண்டுவந்து 13 மாணவர் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. 7.5 விழுக்காடு மருத்துவ இட ஒதுக்கீடு கிடைக்க காரணம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக நடத்திய போராட்டம்தான்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: திருப்தி இல்லாதவர்களுக்கு மறுதேர்வு