சென்னை: குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை செலுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “தமிழ்நாடு அரசு, 2020ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்று, தமிழ்நாடு அரசு பொது சுகாதார சட்டம் 1939-ன் படி கரோனா அறிவிக்கப்பட வேண்டிய பெரும் தொற்றாக அறிவித்தது.
மேலும், தொற்று நோய் சட்டம் 1897 அதன் கீழ் கரோனா தொற்று பரவல் குறித்த தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தமிழ்நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு கரோனா மையங்கள் மூலம் 97 விழுக்காடு பயனடைந்து உள்ளனர். இதில் 18 வயதிற்கு மேல் முதல் தவணை தடுப்பூசி 94.61 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 85.39 சதவீதம் போட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் கரோனா மையங்களில் ஜூலை 5ஆம் தேதி வரையில் 11 கோடியே 42 லட்சத்து 32 ஆயிரத்து 983 டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
மேலும் 14 லட்சத்து 60 ஆயிரத்து 303 தடுப்பூசிகள் முன்னெச்சரிக்கை தவணையாகவும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 30 மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் முலம் 4 கோடியே 44 லட்சத்து 20 ஆயிரத்து 222 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
அரசு கரோனா தடுப்பூசி மையங்கள் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
மேலும் கரோனா 4 ஆம் அலை எதிர்கொள்ளும் வகையில், பெரு மற்றும் குறு தொழிற்சாலைகள், பெரிய கடைகள் மற்றும் பெரிய உணவகங்களில் பணிபுரியும் 18 வயது முதல் 59 வயது வரை உள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் பயனடையும் வகையில் தனியார் கரோனா தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் தவணை செலுத்தி கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் முழுமையான தடுப்பூசி போடும்வரை, கரோனா நோயிலிருந்து பாதுகாப்பாக இல்லை.
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் 10 லட்சம் அளவிற்கு மேலாக தடுப்பூசி செலுத்தி உள்ளோம். மொத்த தொழிலாளர்களுக்கும் எவ்வளவு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற கணக்கை கூடிய விரைவில் எடுக்க இருக்கிறோம். கரோனா தொற்று பாதிப்பின்போது ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படி தற்போது தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் தேவையில்லை.
நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 40 விழுக்காடு பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தாலோ, பரவல் வேகம் 50 சதவீதத்திற்கு அதிகமாக சென்றாலோ தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் அதுபோன்ற நிலை வரவில்லை. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொது முடக்கம் என்பது தற்போது தேவையற்றது.
முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று முகக்கவசம் அணிந்து உள்ளார்களா? என்பதை சுகாதாரத் துறை சார்பாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் ஒட்டியுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டோம். அந்தப் பகுதியில் யாருக்கேனும் காலரா போன்ற நோய் ஏற்பட்டால் நிச்சயமாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: '17 முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்' - கோவை செல்வராஜ்