சென்னை: ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்றனர். இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.
இதனால் ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. பொங்கல் பண்டிகை சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதில் இடையூறை ஏற்படுத்தும் என்பதால், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ஆலோசித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் ஜனவரி 5ஆம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நிதித்துறையுடன் ஆலோசித்துத் தான் முடிவு செய்ய முடியும் என்பதால் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். அனைத்து கோரிக்கைகளையும் ஒரே நாளில் எட்டி விட முடியாது. பேசி முடிவு எடுக்கப்படும் எனப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நிதித்துறைச் செயலர் உடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி சவுந்தரராஜன், "6 அம்ச கோரிக்கைகளில் எதையும் இப்போது ஏற்க இயலாது. பொங்கலுக்குப் பின்னர் பேசிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருக்கின்ற எந்த ஒரு பொதுத்துறை தொழிலாளிக்கும் இழைக்கப்படாத அநீதியைப் போக்குவரத்து தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து இழைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
பஞ்சப்படி எங்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி. எங்களுக்கு உயர்வாகக் கொடுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. எங்களிடம் நீங்கள் பட்டிருக்கும் கடன், எட்டு ஆண்டுகளாக வழங்காமல் இருக்கின்ற கடன். பணிக்கு ஆட்கள் எடுப்பது, புதிய பேருந்துகள் இயக்குவது ஆகியவை தமிழ்நாடு சம்பந்தப்பட்டது. மற்ற கோரிக்கைகளையாவது பின்னர் பார்க்கலாம்.
எங்களிடம் பட்ட கடனையாவது முதலில் கொடுங்கள். பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 4 மாத அகவிலைப்படி ஆகியவற்றையாவது முதலில் கொடுங்கள். அதையும் பொங்கலுக்குப் பின்னர் பேசலாம் என்கின்றார்கள். ஓய்வு பெற்றோருக்கான பஞ்சப்படி, பணியில் உள்ளவர்களுக்கு நிலுவையில் உள்ள 4 மாத அகவிலைப்படியை வழங்கினால் அவர்கள் மகிழ்ச்சியாகப் பொங்கல் கொண்டாடுவார்கள். 15ஆவது ஒப்பந்த கோரிக்கை குறித்துப் பேசுவதற்கு ஒரு தேதியைத் தெரிவிக்க வேண்டும்.
எல்லாரையும் போல போக்குவரத்து தொழிலாளர்களையும் சமமாக நடத்துங்கள். எங்களைப் பாகுபடுத்தாதீர்கள். எங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தாதீர்கள். எங்களிடம் இருந்து பிடித்து வைத்திருக்கின்ற பணத்தைக் கொடுங்கள். இதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் வேலை நிறுத்தத்தை ரத்து செய்ய கேட்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது இந்த அரசாங்கத்திற்கு என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த பொங்கல் நடக்க வேண்டும் என்பதில் எங்களுக்கும் அக்கறை இருக்கின்றது. இந்த பொங்கல் நடக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்த வேண்டியது அரசு தான். பொங்கல் கொண்டாட வேண்டும் என்பதற்காக எங்களது கோரிக்கைகளைச் சுருக்கி அவர்கள் வெறும் மாதம் 70 கோடி ரூபாயில் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியையும் நாங்கள் காட்டி விட்டோம்.
இத்தனைக்கு பிறகும் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என அரசு இருந்தால் அவர்கள் மிகப்பெரிய தவறை இழைக்கின்றார்கள் என்று தான் பொருள். நாங்களும் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற முடியாது என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு அரசு ஏழைத் தொழிலாளியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. எங்கள் வேலை நிறுத்தத்திற்குப் பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும், அரசுக்கும் எங்கள் சார்பில் அழுத்தம் தர வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், அரசின் பதிலில் திருப்தி ஏற்படாததால் நாளை திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நாளை போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தைத் தொடங்கினாலும் பொங்கல் பண்டியையை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்குவதில் எந்த தடங்கலும் ஏற்படாத வகையில் தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.