சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை விரைந்து வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வரும் 4 மாதத்திற்குள் மின் இணைப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம். விண்ணப்பத்தாரர்கள் நிலம் மற்றும் கிணறு உரிமைக்கான ஆவணங்களை உரிய அலுவலரிடம் 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். தற்போது கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பால் 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். தேர்தல் முடிந்தப் பின்னர் விடுபட்ட மாவட்டங்களில் பதிவு செய்தவர்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படும்.
1,59,000 கோடி கடனிலும், கடுமையான நிதி சூழலிலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்து உள்ளார். விரைவில் முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார். இந்த ஆண்டு 214 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். புதிய மின் இணைப்பு கொடுப்பதால் மின்சார உற்பத்திக்கோ, விநியோகத்திற்கோ பிரச்சனை இருக்காது.
மின் தேவை ஒரு நாளைக்கு 16 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கிறது. அதில் 21 விழுக்காடு மின்சார வாரியத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. 40 விழுக்காடு தனியாரிடம் கொள்முதல் செய்கிறோம். மீதமுள்ள மின்சாரம் மத்தியத் தொகுப்பில் இருந்து பெறுகிறோம். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்களில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களில் முக்கியத்துவத்தையும், நிதிநிலையையும் கருத்தில் கொண்டு நிரப்பப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4 மாதங்களில் நிர்வாக ரீதியாக பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு உள்ளோம். தமிழ்நாடு மின்சார வாரியத்தில், 2,38,000 டன் நிலக்கரி மாயம் தொடர்பாக முதல் கட்ட ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறிக்கை கிடைத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உப்பூர் அனல் மின் நிலையம் மறுஆய்வு செய்யப்பட்டு ஆய்வுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டுக்குள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடையும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ”நீட் தேர்வு மசோதா: நல்லதே நடக்கும் என்று நம்புவோம்”