சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று 14வது முறையாக அவரது நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தனர்.
இதனால் அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது எனவும் தெரிவித்தது.
இதையடுத்து, அந்த மனு வாபஸ் பெறப்பட்டது. மேலும் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி, கடந்த டிசம்பர் 15ஆம் தேதி 13வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், 14வது முறையாக இன்றும் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 11ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? - அமைச்சர் முத்துசாமி தகவல்!