சென்னை: கடந்த ஆட்சிக் காலத்தில் புதிய மின் உற்பத்தி திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஆய்வு கூட்டத்தில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடனுக்கு 9.6 சதவீத வட்டி
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், " கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த தவறான நிர்வாகத்தால், மின் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
மின் வாரியம் வாங்கிய ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி கடனுக்கான வட்டி 9.6 சதவீதம் செலுத்தப்படுகிறது. வங்கிகளுடன் பேசி அவற்றை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
எதாவது குற்றம் சாட்டப்படவேண்டும் என, பூதக்கண்ணாடி மூலம் தேடுகின்றனர். மின் விநியோகப் பாதிப்பு தொடர்பாக, மின் இணைப்பு எண்ணுடன் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பதிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மூன்று வாய்ப்புகள்
பொத்தம் பொதுவாக, ஊரின் பெயரை குறிப்பிட்டு பதிவிடக்கூடாது. ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
சுமார் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தியுள்ளனர். கூடுதல் மின் கட்டண வசூல் தொடர்பாக, மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு வரும் புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு, புகாரில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட மின் கணக்கீட்டாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய திட்டங்கள் இல்லை
தமிழ்நாட்டில் மின் தடை என்பது இனி உறுதியாக இருக்காது. பராமரிப்பு பணிக்காக மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்பிற்காக காத்திருக்கின்றனர். புதிய மின் உற்பத்தி திட்டம் எதுவும் கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்படவில்லை" என்றார்.
சகிப்புத் தன்மையில்லை
முன்னதாக, நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்," மக்களிடம் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது. அரை மணி நேரம் மின்சாரம் நின்றுவிட்டாலும், மின் பணியாளர்களுக்கு செல்போன் வாயிலாக உடனே அழைக்கின்றனர்.
கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலம் என்றார்கள். உண்மையில் மிகையாக செலவழித்து, அதிகமான தொகையை கொடுத்து மின்சாரம் வாங்கியுள்ளனர் என்பதே உண்மை" என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களான திரு.வி.க., நகர் தாயகம் கவி , பெரம்பூர் ஆர். டி .சேகர் , ராயபுரம் எபினேசர் , அம்பத்தூர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் புதிய துணை மின் நிலையம் , புதை வட மின் விநியோகம் போன்ற தங்கள் தொகுதிக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதையும் படிக்கலாமே:'தமிழ்நாட்டில் இவ்வளவு மின்சாரம் கிடைக்கக்காரணம் கருணாநிதியே...' - அமைச்சர் ஐ.பெரியசாமி