சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கடந்த ஆட்சிக்காலத்தில் 3500 கோடி ரூபாய் மதிப்புள்ள 8700 கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அதுதொடர்பான பட்டியலை வெளியிடவேண்டும். பல கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருந்தால் சிவகங்கையில் உள்ள கௌரி விநாயகர் கோயில் நிலம் 10 ஏக்கர் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்து ஏன் மீட்கப்படவில்லை?
தற்போது திமுக ஆட்சியில் கோயில் நிலங்களை மீட்கும் பணியானது முன்கூட்டியே அறிவித்து நடைபெற்றுவருகிறது.கடந்த 55 நாள்களில் 79.5 ஏக்கர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ. 520 கோடி. கோயில்களில் உள்ள திருமண மண்டபங்களில் விதிமுறைகளை பின்பற்றி திருமணங்கள் நடக்க தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
நிரந்தரப் பணியாளர்கள்
தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் சொந்தமான 4 கோடி பக்கம் உள்ள ஆவணங்கள் தற்போது டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதேபோல் கோயில் இடங்களில் வசிப்பவர்களின் விவரங்களும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரப் பணியாளராக மாற்ற பணிகள் நடைபெற்றுவருகின்றன.
பட்டியலை வெளியிட வேண்டும்
எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிக்கையில், 40ஆயிரம் நபர்களுக்கு அறநிலையத்துறையில் பணி வழங்குவதற்கான விவரங்களைத் திரட்டி வைத்ததாகவும், ஆனால், தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள் விடுவிக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளதாகவும் கூறினார்.
அறநிலையத்துறையில் பணியாற்றுபவர்கள் மொத்த எண்ணிக்கையே ஒரு லட்சம்தான். எனவே, அவர் கூறியது உண்மைக்கு புறம்பான கருத்து. அவ்வாறு நடந்திருந்தால் அவர்களின் பட்டியலை வெளியிடவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கோயில்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி