சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.14) சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதை முன்னிட்டு, முதலமைச்சர், பால்வளத் துறை அமைச்சர், பால் வளத்துறை அலுவலர்கள் ஆகியோர் மானியக் கோரிக்கைகளின்போது சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
பால் கொள்முதலை உயர்த்துதல், கொள்முதல் செய்யும் அனைத்து பாலையும் விற்பனை செய்தல், பால் உபயோகப்பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்துதல், பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடைத் தீவனம், தாது உப்புக் கலவை, பால் பணப்பட்டுவாடா ஆகியவை உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்தல் போன்றவைகளை ஆய்வு செய்தார்.
பால்வளத்துறை மற்றும் 25 மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகியவற்றின் மூலம் நடைபெற்று வரும் முக்கியமான வளர்ச்சிப் பணிகள், எதிர்காலத்தில் ஆவின் நிறுவனம் வளர்ச்சி அடையத் தேவையான திட்டங்கள் ஆகியவை குறித்து அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு செய்தார்.
”தமிழ்நாட்டில் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் போன்றவற்றில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் அலுவலர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இடைத்தரகர்களால் பால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தரமான பால் கொள்முதல் செய்யப்படுவதை அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் நுகர்வோருக்கு தங்கு தடையின்றி 24 மணிநேரமும் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனவும் அமைச்சர் ஆய்வின் போது அறிவுறுத்தினார்.