சென்னை: சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி நேற்று (ஜுன்.4) புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளுக்குக் கரோனா தொற்று தடுப்பூசி வழங்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்காலப் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கரோனா தொற்று காலத்தில் சிறைத்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்பையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்து வருகிறது. சிறையில் உள்ள கைதிகளில் பரோலில் விடுவதற்குத் தகுதியுள்ள கைதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு இவர்களை வெளியில் விடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களை பரோலில் விடுவதற்கு வாய்ப்பில்லை. இவர்களைத் தவிர, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையில் உள்ள கைதிகள் கடந்த ஆண்டு பரோலில் வெளியே சென்றுள்ளார்கள். அவர்களுக்கு இந்த ஆண்டு எத்தனை நாட்கள் பரோல் வழங்கலாம் என்ற கணக்கு உள்ளது. சிறைச்சாலைகளில் 57 விழுக்காடு கைதிகளே உள்ளன. கரோனா தொற்று காலத்தில் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கைதிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
தமிழ்நாடு சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் இதுவரை 1,700 கைதிகள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் சிறைகளில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கட்டாயம் கரோனா தொற்று தடுப்பூசி போட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கைதிகளுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விரைவில் சிறைகளில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கரோனா தொற்று தடுப்பூசி போடப்படும். கரோனா தொற்று காலத்தில் சிறைகளில் மருத்துவப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்கள் உரிய முறையில் நிரப்பப்பட்டு கைதிகளுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கி பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி சிறைகளில் சட்ட விரோதப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. எனினும், சட்ட விரோத பொருட்கள் கொண்டு செல்லப்படுவது கண்காணிக்கப்பட்டு பிடிக்கப்பட்டால், தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சிறைகளில் சட்ட விரோதப் பொருட்கள் கிடைப்பதைத் தடுத்து கைதிகளுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறைத்துறை செயல்பட்டு வருகிறது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆராய புதிய ஆய்வு குழு