சென்னை: சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-2022 கல்வியாண்டின் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான இணையவழியை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். மாணவர்கள் https://tngptc.in என்ற இணையத்தளத்தின் மூலம் இன்று (ஜூன் 25) தொடங்கி ஜூலை 12ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
துணைவேந்தர் நியமனங்கள்
இணையவழியை தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, " 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு பெற்ற கல்லூரியில் உள்ள 18,120 இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், 450 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
அவர்களுக்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11ஆம் வகுப்பில் சேர என்ன தகுதியோ அதேதான் பாலிடெக்னிக்கில் சேரவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவர் சேர்க்கை எப்போது?
பல்கலைக்கழங்களில் காலியாக உள்ள துணை வேந்தர் நியமனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்படுவார்களா? என்பதை துணை வேந்தர் நியமன கமிட்டிதான் முடிவு செய்யும். மேலும், மாநில பாடத்திட்டதில் படித்த மாணவர்களின் 10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்கப்படும். இதுகுறித்து முதல்வரிடம் கலந்து பேசி அறிவிக்கப்படும்.
12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கலை அறிவியல் தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 12ஆம் வகுப்பு முடித்த சிபிஎஸ்இ மாணவர்கள் மதிப்பெண்கள் ஜூலை 31ஆம் தேதிதான் வெளியிடப்படும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் வாய்ப்பு வழங்கும் வகையில் ஜூலை 31க்கு பின்னர்தான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.
75% கட்டணம் மட்டுமே
உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் கல்லூரிகளில் 75 விழுக்காடு மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும். அதிக கட்டணம் வசூல் செய்யும் கல்லூரிகள் மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படுமா? என்ற கேள்விக்கு கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இருப்பதால் வரும் காலத்தில் இது தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'இடஒதுக்கீடு நம் உரிமை' - வி.பி. சிங்கை நினைவுகூர்ந்த ஸ்டாலின்