சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை உதவி மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (மே 15) திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய அவர், "தமிழ்மொழி பாடங்கள் படிக்கும்போது பாரதியை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றதோடு மருத்துவம், பொறியியல் என எது படித்தாலும் 'தமிழ்' நன்றாக தெரிய வேண்டும் என்றார்.
அனைத்து மக்களுக்கும் ஆங்கிலம் தெரியுமா? என்றால் தெரியாது. ஆனால், தமிழ் அனைவருக்கும் தாய் மொழி; எல்லோருக்கும் தெரியும் என்று கூறினார். ஆங்கில வழியில் படித்தாலும் வீட்டிற்கு சென்றால் தமிழ் மொழியில்தான் அனைவரும் பேசுவதாகவும் ஆகவே, தமிழை நன்றாக படிக்க வேண்டும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினார்.
மேலும், மாணவர் சேர்க்கையில் எந்தவித தவறும் நடந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த தகவல் மையம் மூலம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளதாக கூறினார். மேலும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அதிக அளவில் மாணவிகள் சேருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேருவதற்கு விண்ணப்பித்து வருவதாகவும், அவர்களின் சேர்க்கை எண்ணிக்கை முடிந்த பின்னர் அவை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றார். கள்ளக்குறிச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வதில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இருப்பினும், அதனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக ஆட்சிக்காலத்திலேயே கள்ளச்சாராயம் இருந்தது எனவும் அவர்களது கட்சியினர் வளர்வதற்காகவே அதை கண்டும் காணாமல் இருந்தனர் என்றும் கடுமையாக சாடினார். இந்த ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் படி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பதிலளித்தார்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டுமென அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: TN Toxic Liquor Death: விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு!