தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தண்டையார் பேட்டை மண்டலத்தைப் பொறுத்தவரை தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இந்தியா - சீனா பிரச்னையில் மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கும் மு.க.ஸ்டாலின் கரோனாவுக்கு எதிராகச் செயல்படும் மாநில அரசின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். தொற்று பாதிப்பு குறித்த விவரத்தை வெளிப்படை தன்மையுடன் சொல்லும் ஒரே மாநிலம், தமிழ்நாடுதான்.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் இயங்கிவருகின்றன. எந்தளவுக்கு தொழிற்சாலைகளை திறக்க முடியுமோ அந்தளவுக்கு திறக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடு வீடாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் பணியும் நடைபெற்றுவருகிறது.
எந்தத் தெருக்களில் அதிக பாதிப்பு வரும் என்று கணக்கிட்டு அந்தப் பகுதிகளில் மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுகிறது. காவல் துறையினரின் கடும் கட்டுப்பாடுகளால் மக்கள் வெளியே வருவது முன்பைவிட குறைந்துள்ளது.
கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நச்சுக் கருத்துக்களை பரப்புகிறார். அவருடைய கருத்தில் உண்மை இல்லை" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!